என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? தொடர்-2. - தமிழ் DUNYA

தமிழ் DUNYA

தமிழ் இனத்தின் சங்கமம்

Breaking

AdSense-02

25/11/2018

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? தொடர்-2.

வானம் தொடும் வாய்ப்பு..!

அரசுப் பணிக்காக தயாராகும் தேர்வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இது ஆரோக்கியமான விஷயம். போட்டித்தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வே இதற்கு காரணம். அதோடு வயது வித்தியாசம் இல்லாமல் பல்வேறுபட்ட வயதினர் இருக்கக்கூடிய ஆர்வத்தையும் நம்பிக்கையையும் காட்டுகிறது.

ஆர்வம் ஒன்று மட்டுமே தேர்வை நோக்கி துடிப்பாக நகர்த்த உதவும்.

இரண்டு முக்கியமான விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்வு குறித்து அறியாமையாலும் முழுமையான புரிதல் இல்லாமலும் தரப்படுகின்ற தவறான ஆலோசனைகளால் பலர் பல நல்ல வாய்ப்புகளை இழந்து விடுகிறார்கள்.

பொதுவாக எழும் சந்தேகங்கள்..

30 வயதைத் தாண்டிவிட்டாலே பலர் வயது தகுதியை இழந்து விட்டோம் என்று முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். 30 வயது முடிந்து விட்டது இனிமேல் என்னால் எந்த தேர்வையும் எழுத முடியாது என்று தாங்களாகவே முடிவு செய்துவிடுகிறார்கள்.

இவர்களிடம் போய் அறிவுரை கேட்பவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.

வயதைப் பொறுத்தவரை கீழ்கண்ட விஷயங்களை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

ஏதேனும் ஒரு அரசு வேலைக்கு சென்றால் போதும் என்று நினைப்பவர்களுக்கு 57 வயது வரை வாய்ப்பிருக்கிறது.

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு எழுதுவதற்கு பத்தாம் வகுப்பு தகுதி போதுமானது. பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி இருந்தால், இவர்களுக்கு உச்சவயது வரம்பு உண்டு. ஆனால் பத்தாம் வகுப்புக்கு மேல் கூடுதலாக எந்த ஒரு படிப்பைப் படித்து இருந்தாலும் அவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. அதாவது 58 வயது என்பது ஓய்வு பெறும் வயது என்பதால் 57 வயது வரை எழுதலாம். பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்கள், பட்டயப்படிப்பு முடித்தவர்கள், (பாலிடெக்னிக் முடித்தவர்கள்) பட்டப்படிப்பு படித்தவர்கள், இவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

அதுபோலவே குரூப்-2 தேர்வு எழுத ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்போது குரூப்-2 தேர்வு, நேர்முகத்தேர்வு உள்ள பணிகள் நேர்முகத்தேர்வு இல்லாத பணிகள் என்று இரண்டு வகையாக நடத்தப்படுகிறது.

நேர்முகத்தேர்வு இல்லாத பணிக்கு வயது வரம்பு இல்லை. இவர்களும் 57 வயது வரை எழுதலாம். குரூப்-2 நேர்முகத்தேர்வு இல்லாத பணிகள் என்பது பெரும்பாலும் உதவியாளர் (assistant )பணியிடங்களாக இருக்கும்.

வங்கித் தேர்வுகள், ரயில்வே பணியிடங்கள், அஞ்சல் துறை தேர்வுகள், இவற்றுக்குத்தான் உச்ச வயது வரம்பு உண்டு. வங்கித் தேர்வுகள், ரயில்வே பணியிடங்கள், அஞ்சல் துறை தேர்வுகள், போன்ற துறைகளில் இளைஞர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படுகின்றன. 30 வயதுக்கு கீழ் இருந்தால்தான் இத்துறைகளில் நுழைய முடியும்.

ஆனாலும் இந்த வயதுவரம்பு என்பது பொதுப் பிரிவினருக்கு மட்டும்தான்.

மேற்படி இட ஒதுக்கீட்டு பிரிவில் வரும் தேர்வர்களுக்கு இந்தத் துறைகளில் உச்ச வயதுவரம்பு தேர்வர்களுக்கு இந்தத் துறைகளில் உச்ச வயது வரம்பிலிருந்து சில ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்படும்.

அதுபோல ஆசிரியர் தகுதித் தேர்வுகள், வேலைக்கான ரெக்ரூட்மெண்ட் தேர்வுகள் ஆகியவை எழுத வயது வரம்பு இல்லை. பேராசிரியர் பணியிடங்களுக்கு இதே முறைதான்.

ஆசிரியர், பேராசிரியர் பணியிடங்களை பொறுத்தவரை வகுப்புவாரியாக இல்லாமல் எல்லா பிரிவினரும் 57 வயது வரை தேர்வு எழுத முடியும்.

30 வயது என்பது அரசு பணிக்கான கனவுகள் முடிந்துபோகும் வயது அல்ல பலருக்கு அரசுப்பணி கனவுகள் தொடங்கும் வயதுதான் 30.

இது வெறும் எதுகை மோனைக்காக சொல்லப்படும் செய்தி அல்ல உண்மையிலேயே பல இளைஞர்களுக்கு 30 வயதில் தான் அரசு பணிக்கு போக வேண்டும் என்கிற எண்ணமே வருகிறது.

கல்லூரியில் படிக்கும் வரை ஏதோ வெறுமனே கற்பனைகளோடும் கனவுகளோடும் நாட்களைக் கடத்தி விடுகிறார்கள்.

கல்லூரிப் படிப்பு முடித்து விட்டு மறுபடி சில வருடங்கள் திசை தெரியாமலும் தனியார் நிறுவனங்கள், காண்ட்ராக்ட் வேலைகள், அவுட்சோர்சிங் பணி, என்று செய்கிறார்கள். பிறகு தன் வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பு பாதுகாப்பு தேவை என்பதை பல இளைஞர்கள் உணர்கிறார்கள். அப்போதுதான் அரசுப்பணியின் மீது அவர்களின் கவனம் திரும்புகிறது.


அப்போது அவர்கள் 30 ஐ தொட்டிருக்கிறார்கள் அல்லது 30 வயதை கடந்து இருக்கிறார்கள் இவர்கள் திருமணம் செய்தவர்களாகவோ, அல்லது திருமணத்திற்கு வரன் தேடுபவர்களாகவோ இருக்கிறார்கள். நான் சொல்வதெல்லாம் அத்தனையும் யதார்த்தம்.

ஒரு மாதிரியான குழப்பமான மனநிலையும், வாழ்க்கை சூழலும் கூடிய நிலையில் தான் படபடப்பாக, பதற்றத்தோடு தேர்வைப் பற்றி நினைக்கத் தொடங்குகிறார்கள்.

நான் ஒன்றும் யாரையும் விமர்சனம் செய்யவில்லை. மாறாக நீங்கள் பதற்றப்பட வேண்டாம். படபடப்பாக வேண்டாம். உங்கள் கனவுகள் விரைவிலேயே நிறைவேற்ற முடியும் என்றுதான் சொல்ல வருகிறேன்.

30 வயதிலாவது விழித்துக் கொண்டோமே! என்று நீங்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள். வாழ்வதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. வாழ்க்கையை வசப்படுத்தி வலுப்படுத்திவிடலாம்.

அதிகபட்சமாக ஒரு வருடம் முயன்று படித்தால் போதும் நிச்சயமாக வெற்றி பெற்றுவிடலாம். 30 வயதில் இருந்து 40 வயது வரை உள்ளவர்கள் தீவிரமாக படித்து டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் வெற்றி பெறுகிறார்கள். நீங்கள் வெற்றி பெற்றவர்களின் புள்ளிவிவரத்தை பார்த்தால் இதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

50 வயதில் வேலைக்கு சேர்ந்தவர்கள், 52 ல் வேலைக்குச் சேர்ந்தவர்களை கூட என்னால் அடையாளம் காட்ட முடியும்.

இதைவிட ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அதுவும் சமீபத்தில்தான். எம்.ஏ.பிட். முடித்த ஒருவர் 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதினார். தேர்வு எழுதும்போது அவருக்கு வயது 57. அவர் தேர்ச்சியும் பெற்று விட்டார். பரவாயில்லை வேலை கிடைத்தால் போதும், ஒரு வருடமாவது அரசாங்க சம்பளம் வாங்கி விட வேண்டும் என்ற தீவிர ஆசை அவருக்கு.

ஆனால் சட்டமும் சூழலும் அவருக்கு சாதகமாக இல்லை. வெயிட்டேஜ் மதிப்பெண்களை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது வழக்கு ஒரு முடிவுக்கு வந்தது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியது. அதிலும் கலந்துகொண்டார் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து அப்பாயின்மென்ட் ஆர்டர் வருவதற்கு மறுபடியும் காலதாமதம் ஆகிவிட்டது.

பணி நியமன ஆணை வரவேண்டிய நேரம் 58 வயதை கடந்து விட்டார். பணி நியமன ஆணை பெற முடியாமல் போய்விட்டது. பணி நியமன அதிகாரி அவருக்கு பொன்னாடை போர்த்தி கொஞ்சம் ரொக்கப் பரிசு வழங்கினார்.

இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் 58 வயதிலும் அவர் காட்டிய ஆர்வம், முயற்சி, அந்த ஆர்வம், முயற்சி, உங்களுக்கு இருக்குமானால் எந்த வயதிலும் வெற்றி நிச்சயம்.

57 வயதில் வேலைக்கு சேர்ந்து என்ன பிரயோஜனம் என்று நீங்கள் கேட்கலாம். அரசு ஊழியர்களுக்கு என்று கிடைக்கும் அத்தனை சலுகைகளும் உங்களுக்கும் கிடைக்குமே!.

தேர்வு எழுதுபவர்கள் அடிக்கடி கேட்கக்கூடிய சந்தேகம் நான் எந்த தேர்வுக்கு தயாராவது? டி.என்.பி.எஸ்.சி க்குபடிக்கலாமா? டி.ஆர்.பி க்கு படிக்கலாமா? வங்கித் தேர்வுக்கு படிப்பதா?

இதில் குழப்பமே தேவையில்லை எல்லா தேர்வுகளுமே போட்டித் தேர்வுகள் தான். எல்லாமே ஏறத்தாழ ஒரே விதமான திறமையை சோதிக்க நடத்தப்படுபவை தான். அதனால் அதில் தேவையில்லாமல் குழப்பிக் கொள்ள அவசியமில்லை.

எல்லா தேர்வுகளுக்கும் ஒருங்கிணைந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். இப்படி ஒருங்கிணைந்த பயிற்சி மேற்கொள்ளும் போது சரியாக திட்டமிடுதல் மிக அவசியம்.

ஒருவேளை நீங்கள் ஆசிரியர் தேர்வு, வங்கித் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஆகிய மூன்று தேர்வுகளுக்கும் இணைந்து படித்தால் 3 தேர்வுகளுக்கும் தனித்தனியே நேரம் ஒதுக்கி படிக்கலாம்.

ஒரு நாளைக்கு வங்கித் தேர்வுக்கு 4 மணிநேரம், ஆசிரியர் தேர்வுக்கு 4 மணிநேரம், டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு நான்கு மணி நேரம், என்று 12 மணி நேரம் படிக்க வேண்டும்.
பிற வேலைகளுக்கு இரண்டு மணி நேரம், ஒரு நாள் முழுக்க படித்ததை மீள்பார்வை செய்து பார்க்க ஒரு மணி நேரம், கொஞ்சம் நேரம் என்று 16 மணி நேரம் உழைக்க வேண்டும்,

இந்த வேகத்தில் நீங்கள் படித்தால் அதிகபட்சம் ஒரு வருடத்தில் உங்கள் அரசு பணிக்கான கனவு என்கிற லட்சியம் நிறைவேறுவது நிச்சயம்.

பிக் பிரேக்கிங் இன்பர்மேஷன்

போட்டித் தேர்வு எழுதுபவர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த குரூப்-2 தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், தயாராகவும் வேண்டிய நேரம் இது.

மிகப்பெரிய பணிகளுக்கு செல்லக்கூடிய அருமையான வாய்ப்பு இது. நேர்முகத்தேர்வு உள்ளடக்கிய உயர் பதவிகளுக்கான தேர்வு இது. எளிமையான தேர்வு இது.

தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்கள் சார் பதிவாளர், நகராட்சி ஆணையாளர், வேலைவாய்ப்பு அலுவலர் போன்ற பதவிகள் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கும் செல்லலாம். விரைவிலேயே நல்ல புரமோஷன் கிடைக்கும்.

இந்த தேர்வு மூன்று கட்டங்களை உள்ளடக்கியது. முதல் கட்டம் நுழைவுத்தேர்வு மாதிரி முதல்நிலைத்தேர்வு, இது 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.( இந்த தேர்வு இந்த ஆண்டு 11-11-2018 அன்று நடைபெறுகிறது.)

தமிழில் 100 வினாக்களும் ஆப்டிடியூட் பகுதியில் 25 வினாக்கள், பொது அறிவு பகுதியில் 75 வினாக்களும் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒன்றரை மதிப்பெண்கள் ஆக மொத்தம் 300 மதிப்பெண்கள். ( இது அப்ஜெக்டிவ் டைப் தேர்வு தான் எளிமையாகவே இருக்கும்.)

இந்த முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் நிலைத் தேர்வான முதன்மைத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள். முதன்மை தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

இது விரிவான வகையில் விடையளிக்கும் வகையில் அமைந்திருக்கும். பொது அறிவு சார்ந்த வினாக்கள் மட்டுமே கேட்கப்படும். பொது அறிவு என்பது வரலாறு, புவியியல், பொருளியல், அரசியல் அமைப்பு, இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல், நடப்பு நிகழ்வுகள், விளையாட்டு ஆகியவற்றை உள்ளடக்கியது.

முதல்நிலைத் தேர்வில் உங்களால் 200 மதிப்பெண்களை கடந்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் நீங்கள் உடனே முதன்மைத் தேர்வுக்கு தயாராக தொடங்கிவிடலாம். முதல்நிலைத் தேர்வின் ரிசல்டுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. முதல்நிலைத்தேர்வு முடிவுக்கும் முதன்மை தேர்வுக்கான கால இடைவெளி குறைவாகவே இருக்கும். என்பதால் முதல் நிலை தேர்வு (Prelims) முடிந்தவுடன், முதன்மை (Main) தேர்வுக்கு தயாராக தொடங்கி விட வேண்டியது மிக அவசியம்.
முதன்மைத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் நேர்முகத் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள்.

முதன்மைத் தேர்வில் நீங்கள் எடுக்கும் மதிப்பெண்களுடன் நேர்முகத்தேர்வு மதிப்பெண்களையும் கூட்டி ( இட ஒதுக்கீடு அடிப்படையில் ) ரேங்க் பட்டியல் தயாரிப்பார்கள்.

மொத்தம் 1199 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது உற்சாகமாக எழுதுங்கள் அதில் ஒரு இடம் உங்களுக்குத்தான்.
நன்றி.. சந்திப்போம்..!

No comments:

Post a Comment

AdSense-03