வெள்ளுடை வேந்தர் சர்.பி. தியாகராயரின் வரலாறு.. - தமிழ் DUNYA

தமிழ் DUNYA

தமிழ் இனத்தின் சங்கமம்

Breaking

AdSense-02

09/12/2018

வெள்ளுடை வேந்தர் சர்.பி. தியாகராயரின் வரலாறு..


சென்னைக்கு வெளியூரிலிருந்து வருபவர்கள் தவறாமல் வந்து செல்லும் ஒரு இடம் டி.நகர். ஆம்! தியாகராய நகர் தான் டி.நகர் என்றாகிவிட்டது. ஆனால் இந்தப் பகுதிக்கு இப்படி ஒரு பெயரை 1925ஆம் ஆண்டில் சர்.பி. தியாகராயர் நினைவாக வைத்தார்கள்.

சென்னை சென்ட்ரல் அருகில் உள்ளது ரிப்பன் பில்டிங். அந்தக் கட்டடம் தான் சென்னை மேயரின் ஆட்சி அலுவலகம். அந்த அலுவலகம் முன்பு கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது சர்.பி.தியாகராயரின் சிலை. வெள்ளையர்கள் ஆட்சி செய்தபோது 1920ஆம் ஆண்டு மாண்டேடு செம்ஸ்போர்டு பரிந்துரைப்படி முதன் முதலாக நகரின் மேயர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற சட்டம் வந்தது. அந்தச் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் தான் சர்.பி தியாகராயர்.
1882 முதல் 1923 வரை அதாவது 41 ஆண்டுகள் சென்னை மாநகரரின் ஆட்சியில் பல பொறுப்பில் இருந்து சென்னைக்கும், தமிழகத்திற்கும் நலம் பல செய்தவர் சர்.பி.தியாகராயர்.

இளமையும், வாழ்வும்.

1852 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி அய்யப்ப செட்டியார் மற்றும் வள்ளியம்மாளுக்கு மூன்றாவது மகனாகச் சென்னை கொருக்குப்பேட்டையில் பிறந்தவர். நெசவு, மற்றும் தோல் பதனிடும் தொழிலைச் செய்து வந்த பெரும் பணக்காரரின் மகன். உப்பளம், சுண்ணாம்புக் காளவாசல் என்று பல்வேறு தொழில்களையும் செய்து கொண்டு செல்வச் சீமானாக திகழ்ந்தவர்.

எப்போதும் வெள்ளுடை அணியும் தியாகராயர் தனது வேலைகளை கண்காணிக்க மிடுக்காந குதிரைகள் கொண்ட சாரட்டு வண்டியில் சென்று வருவாராம். சென்னை இராயபுரத்தில் மணியக்கார சத்திரம் என்ற இடத்தில் பல்வேறு ஏழைகளுக்கும் உதவிகள் செய்து வந்த கொடையாளர்.

மாநிலக் கல்லூரியில் பி.ஏ.பட்டம் படித்த இவர், அக்காலத்தில் தமிழகத்தில் வெள்ளையர்கள், ஆளுநர்கள் மதித்த மிகப்பெரும் மனிதராக திகழ்ந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் பெரும் காலத்தைச் செலவிட்ட அவர் பின்னாளில் காந்தியோடு ஏற்பட்ட சில உரசல்கள் காரணமாக நீதிக்கட்சியை தோற்றுவித்தார்.


"நீதி" என்ற பெயரில் ஒரு பத்திரிகையையும் நடத்தி வந்தார். பல்வேறு செல்வந்தர்கள், மிராசுதாரர்களும் இணைந்து நடத்திய கட்சியே ஆரம்பத்தில் நீதிக்கட்சியாக இருந்துள்ளது.

தனது வீட்டுக்கு அருகில் "பிட்டி நெசவு ஆலை" என்ற ஒரு ஆலையை உருவாக்கி, நூற்றுக்கும் மேற்பட்ட தறிகளைப் போட்டு புதிய முறையில் துணிகளை நெய்துள்ளார். அக்காலத்தில் நாடாவை கைகளில் தள்ளிக்கொண்டு தான் செய்ய வேண்டும். ஆனால் சற்று முன்னேற்றமாக குஞ்சம் இழுத்து நெய்யும் புதிய முறையை இவர் கையாண்டார்.

காந்தியடிகள் பரம்பரையான முறையில் நெசவுத் தொழிலைச் செய்ய வேண்டும் என்று கூறிய போது, அதை எதிர்த்த சர்.தியாகராயர் காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப புதுமைகளைப் புகுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன் பிறகு சென்னை வந்த காந்தியடிகளை அன்போடு சிறப்பாக வரவேற்றார். அப்போது தியாகராயரின் நெசவு ஆலையை நேரில் சென்று பார்த்த காந்தியடிகள் தனது ஆசிரமவாசிகளுக்கும் இந்த முறையைக் கற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதைக் கற்றுக் கொள்வதற்காக தனது மகன்கள் மணிலால், மதன்லால் இருவரையும் சென்னைக்கு அனுப்பினார் காந்தியடிகள். இவர்கள் இருவரும் ஆறு மாத காலம் தியாகராயர் வீட்டில் தங்கி இதை கற்றுக் கொண்டார்கள். இப்படி புதுமையை எதிலும் கொண்டு வரவேண்டுமென்று துணிந்தவர் சர்.தியாகராயர்.


பொது வாழ்வில்.

சர்.பி.தியாகராயர் மாபெரும் புரட்சியாளராகத் திகழ்ந்தவர். "தென்னிந்திய வர்த்தகச் சங்கம்" என்ற அமைப்பை இவர்தான் தோற்றுவித்தார். தொழில் முனைவோர்களையெல்லாம் ஓரணியில் திரட்டினார். இன்று பல தொழில் முனைவோர் மாநாடுகள் நடக்கின்றன. ஆனால் முதன் முதலில் தொழில் முனைவோர் மாநாட்டை தொடங்கி நடத்திச் சாதனை படைத்தவர் இந்த வெள்ளுடை வேந்தர்.

ஒரு சமயம் எட்டாம் எட்வர்ட் மன்னர் சென்னை வந்தபோது அவரை வரவேற்க சர்.பி.தியாகராயரை இந்தியர் சார்பாக அழைத்தார்கள். அதேசமயம் சர்.தியாகராயர் ஆடம்பர உடையில் வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர் வெள்ளையர். தியாகராயர் நான் "வெள்ளுடையில் தான் வருவேன்" என்று அழுத்தமாக கூறியதும் அப்போதைய ஆளுநர் சரி என்று சொல்ல வேண்டியதாயிற்று.

இதே போல ஆளுநர் விருந்தினர் மாளிகைக்கு விருந்துக்கு அழைத்த போதும் "வெள்ளுடையில் மட்டுமே வருவேன்" என்று கூறியதால் வேறுவழியின்றி ஆளுநர் அனுமதி தர வேண்டியதாயிற்று. அதாவது இந்திய உடையும், இந்தியர்கள் கலாச்சாரமும் வெள்ளையருக்குச் சற்றும் சளைத்தது இல்லை என்று நிரூபித்தவர் சர்.பி. தியாகராயர்.

தென்னிந்திய வர்த்தக சங்கம் மூலம் நம்மவர்கள் வியாபாரம் தழைக்கும் என்று கருதிய ஆங்கிலேய அரசாங்கம் இவருக்கு எதிராகவும் செயல்பட்டது. அதையும் சாமர்த்தியமாக முறியடித்தார் தியாகராயர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு பத்தாயிரம் செலவு செய்து குடமுழுக்குச் செய்தார். பார்த்தசாரதி கோவிலுக்கும் பல நற்பணிகளை செய்தார். வண்ணாரப்பேட்டையில் இருக்கும் இராமலிங்க சவுடேஸ்வரி ஆலயத்தில் உற்சவ சிம்ம வாகனத்தில் பதிப்பதற்காக இரண்டு கண்ணாடி கண் விழிகளை இலண்டனிலிருந்து வரவழைத்து பொருத்த்தியவர் சர்.பி. தியாகராயர். ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை அன்றாடம் செய்வதே தன் பணியாகக் கொண்டிருந்தவர்.

அக்காலத்தில் "Indian Patriot" அதாவது இந்திய தேசப்பற்று என்ற பொருளில் வந்த ஒரு மாத இதழில் இந்தியர்களுக்கு எதிராக சில செய்திகளைக் கண்டு வெகுண்டெழுந்த அவர் அக்காலத்திலேயே 2000 ரூபாய் செலவழித்து வழக்காடியுள்ளார். அக்காலத்தில் ஒரு பவுன் தங்கம் விலை
5 ரூபாய்தான் என்பது இந்த 2000 ரூபாய் மதிப்பை நமக்கு சொல்லும்.

காங்கிரஸ் கட்சியில் சாதி ஆதிக்க சக்திகள் அதிகமாவதை கண்ட தியாகராயர் அக்கட்சியை விட்டு வெளியேறினார். இப்படி உருவானதுதான் நீதிக்கட்சி, பின்பு இந்த நீதிக்கட்சி தந்தை பெரியாரால் ஏற்கப்பட்டது. அதன் பிறகு அது ஆட்சி செய்யும் நிலையில் இருக்கக்கூடாது என்று பெரியாரால் திராவிடர் கழகமாக மாற்றப்பட்டது. பின்பு பெரியாரை குருவாகக் கொண்ட அண்ணா போன்றவர்களால் திராவிட கட்சி உதயமானது வரலாறு. ஆக இன்று தமிழகத்தை மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கும் திராவிடக் கட்சிகளின் தாய் கட்சி நீதிக்கட்சிதான். இக்கட்சிகளின் பல நல்ல கோட்பாடுகள் மற்றும் செயல்முறைகளுக்கும் வழிவகுத்தது நீதிக்கட்சிதான்.

இந்த நீதிக்கட்சிதான் 1920 ஆம் ஆண்டு முதல் பல ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தது. இக்கட்சி மூலம் தான் தமிழகமும், தென்னகமும் பல புதுமையான, புரட்சியான திட்டங்களை பெற்றது. சமூக நீதியைக் காத்து நிற்கவும் இக்கட்சியே உதவியது.

நீதிக்கட்சியின் சிறப்பான பணிகள்.

உயர் ஜாதி இந்துக்கள் மட்டுமே ஒரு காலத்தில் அனுபவித்து வந்த பல வசதிகளை எல்லா சாதியினருக்கும் பரவலாக்கியவர்கள் இந்த நீதிக் கட்சியை சார்ந்தவர்கள் தான். அதனால்தான் இக்கட்சியை பெரும்பான்மையோடு மக்கள் வெற்றி பெறச் செய்தார்கள்.

அப்போது அக்கட்சியின் தலைவராக இருந்த சர்.பி.தியாகராயரை சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ஆகுமாறு வெலிங்டன் பிரபு அழைத்தார். அந்த அழைப்பை மறுத்த சர்.பி.தியாகராயர் கடலூரைச் சார்ந்த சுப்பராயலு ரெட்டியாரை முதல்வராக்கி வழி மொழிந்தார்.

சர்.பி.தியாகராயரின் உடன் பிறந்த தம்பி தன் அண்ணனை எப்படியும் முதல்வராக்க வேண்டும் என்று அடம் பிடித்த போது மூன்று நாள் சாப்பிடாமல் உண்ணா நோன்பிருந்து தம்பியை மனம் மாற்றினார். தனது விருப்பம் சேவை செய்வதே அல்லாமல் தலைமையேற்பதில்லை என்று கூறிவிட்டுக் கட்சிப் பணிகளுக்கு நேரம் தேவை என்று குறிப்பால் உணர்த்தினார். ஆங்கிலேயர்கள் இவரை அமைச்சராக இருக்க வேண்டும் என்று பலமுறை வற்புறுத்தியும் அதை மறுத்தார் தியாகராயர்.


சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் கொண்டு வர காரணமாக அமைந்தார்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் தியாகராயர் பள்ளி மற்றும் கல்லூரியை தன் சொந்த பணத்தில் தொடங்கி உதவினார். பச்சையப்பன் அறக்கட்டளையை சீரமைத்து பல நற்பணிகளை செய்ய உதவினார்.

சென்னை பல்கலையில் தமிழுக்கு முக்கியத்துவம் குறைகிறது என்று கருதியவர் சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தோன்றுவதற்கு மூலகாரணமாக அமைந்தார்.

தெலுங்கு மக்களின் நலன் கருதி ஆந்திரா பல்கலைக்கழகம் உருவாகவும் காரணமாக இருந்தார்.

கல்லூரியில் அக்காலத்தில் அனுமதி முதல்வரின் விருப்பப்படியே தரப்பட்டது. இதனால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்லூரிக்கல்வி எட்டாத கனியாக அமைந்தது. நீதிக்கட்சி இதை முற்றிலும் மாற்றியது. எல்லா சமூகத்தவரையும் கொண்ட ஒரு குழுவை ஒவ்வொரு கல்லூரிக்கும் நியமித்து அனைத்துச் சாதி மக்களுக்கும் கல்லூரியில் இடம் கிடைக்க வழி செய்தவர் தியாகராயர்.

"இந்து அறநிலையச் சட்டம்" கொண்டுவந்து ஆலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்ததும் இந்த நீதிக்கட்சி தான். தாழ்த்தப்பட்ட மக்களின் பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு தந்தது இக்கட்சியின் ஆட்சியில்தான். பல்வேறு செல்வந்தர்களும் ஊக்குவிக்கப்பட்டு ஆதிதிராவிட மக்களுக்கு சொந்த நிலமும், வீட்டு மனையும் கிடைப்பதற்கு வழி வகுத்ததும் நீதிக்கட்சி ஆட்சியில் தான் என்கிறது வரலாறு.

புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு "ஆதிதிராவிடர்" என்ற பெயர் தந்ததும் இக்கட்சியின் ஆட்சியில்தான். இம்மக்கள் எல்லா கிணறுகளிலும் தண்ணீர் எடுக்கலாம் என்ற சட்டத்தை 1924-ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி கொண்டு வந்து சமூக வளர்ச்சிக்கு உதவியதும், இதன் உழைப்பில் சர்.தியாகராயர் முன்னின்றதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு இளைஞன் ஒரு சமயம் ஏதோ கேள்வி கேட்க தியாகராயரிடம் வந்தான். அவர் அவனை நெருங்கிச் சென்றபோது அவன் பின்வாங்கினான். இதைக்கண்ட தியாகராயநகர் "தம்பி உன் இரத்தத்தில் அச்சம் இருக்கிறது. வாயில் மட்டுமே வீரம் இருக்கிறது. முதலில் அச்சத்தை விடு" என்று கூறி அவனை ஊக்கமூட்டினார்.



ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் அவர்கள் மதிக்கவும், அஞ்சவும் செய்த மனிதராக சர்.பி. தியாகராயர் திகழ்ந்துள்ளார். தன்னை எதிர்த்தவர்களிடமும் அன்பு காட்டியுள்ளார். சர்.பி. ராமசாமி அய்யர் தியாகராயரை எதிர்த்துத் துப்பாக்கியைக் காட்டி தேர்தலில் நின்று வாக்கு சேகரித்தார். ஆனால், அவர் இறந்த போது "ஒரு நல்ல மனிதரை இழந்தோமே" என்று சட்டமன்றத்தில் முதலில் பேசியவரும் தியாகராயர் தான்.

சென்னை மாநகரின் பல இடங்களில் பூங்காக்கள் அமைய காரணமாக அமைந்தார். மருத்துவர்களாக இந்தியர்களும் வரலாம் என்று இந்தியர்களுக்கு வாய்ப்பை முதலில் பெற்றுத்தந்தது நீதிக்கட்சிதான்.
கட்டாயக் கல்விச் சட்டமும் இந்த ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. 1850 ஆம் ஆண்டிலேயே இந்தியர்களுக்கு சாதி பாகுபாடின்றி கல்வி வழங்க வேண்டும் என்று ஆங்கில அரசு வற்புறுத்தியது. ஆனால் சிலரது ஆதிக்கத்தால் இது நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் ஏழைகளும், அனைத்துச் சாதியினரும் கல்வி பயிலும் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கிய கட்சிதான் நீதிக்கட்சி.

யுனானி, ஆயுர்வேதம், சித்த மருத்துவம் ஆகியவற்றை அங்கீகரித்து அவற்றையும் கல்வியாக்க வேண்டும் என்று வலியுறுத்தியதும் நீதிக்கட்சியின் ஆட்சியில்தான்.

சர்.பி.தியாகராய செட்டியார் அவர்களின் வரலாற்று சாதனைகளை நமது இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். என்ற நோக்கில்தான் இக்கட்டுரை. இன்று எல்லோருக்கும் கல்வி, சமுதாய முன்னேற்றம், சமமான வாய்ப்புகள் இச்சமூகத்தில் நிறுவுவதற்கு இந்த மாபெரும் மனிதர் முக்கிய காரணமாக இருந்துள்ளார் என்பதை நாம் நன்றியோடு நினைக்க வேண்டும்.

நம் மண்ணில் தோன்றிய இச்சாதனை மனிதரின் அற்புதமான சமூகப்பணிகள் தான் இன்று நாம் மனிதர்களாகச் சமூகத்தில் வலம் வர உதவியுள்ளது. வெள்ளுடை வேந்தர் என்று அன்போடு அழைக்கப்பட்ட ஐயா சர்.பி.தியாகராயர் வெள்ளிடை மலையாக நம்முன் தென்படுகின்றார். சமூகநீதி காப்பதில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்ந்திட இந்த மாமனிதரை போன்ற பெரியோர்களை காரணம் என்பதை உள்ளத்தில் விதைப்போம்.
நம்மால் ஆனதை செய்து நாட்டை உயர்த்த உறுதியேற்போம்..!

No comments:

Post a Comment

AdSense-03