பிரபலங்களின் மறக்க முடியாத நிகழ்வுகள் - பகுதி-1 - தமிழ் DUNYA

தமிழ் DUNYA

தமிழ் இனத்தின் சங்கமம்

Breaking

AdSense-02

21/10/2018

பிரபலங்களின் மறக்க முடியாத நிகழ்வுகள் - பகுதி-1


1.ஆப்ரஹாம் லிங்கன்,

சாராயக்கடை ஊழியர்!

ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது கடுமையான போட்டி நிலவியது.

அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் சிறிதும் கூட நாகரீகம் இல்லாமல் ஆப்ரஹாம் லிங்கனை பார்த்து சாடினார்.
" உங்களை எனக்கு தெரியாதா? நீங்கள் சாரயக்கடையில் வேலை பார்த்தவர்தானே!" என்றார் அவர்.

அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆப்ரஹாம் லிங்கனை திகைப்போடு பார்த்தனர்.

ஆப்ரஹாம் லிங்கன் பொறுமையுடன் கூட்டத்தினரைப் பார்த்தார்.

பிறகு அமைதியாக அந்த வேட்பாளரைப் பார்த்து " நண்பரே! நான் சாரயக்கடையில் வேலை பார்த்தது உண்மைதான், நான் டோக்கன் வழங்கும் கவுண்டரின் உள்பக்கம் நிற்கும்போது , நீங்கள் கவுண்டரின் முன்பக்கம் நின்று கொண்டிருப்பீர்களே, அதை ஏன் சொல்லாமல் விட்டீர்கள்? " என்றார்.

அதை கேட்டதும் எதிர் கட்சி வேட்பாளர் தலைகுனிய, மக்கள் பலத்த கைதட்டல் எழுப்பினார்கள்.
தேர்தலில் அவரையே வெற்றி பெறச் செய்து அமெரிக்காவின் ஜனாதிபதி ஆக்கினர்.

2. காந்திஜி,

எனக்கு எங்கே தட்டு?

இந்தியாவில் சுதந்திர போராட்டம் தீவரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலம்.

அப்போது தமிழகத்திற்கு வந்திருந்த காந்திஜி ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது பிரபல திரைப்பட நடிகையும் பின்னணிப்  பாடகியுமான கே.பி. சுந்தராம்பாளின் வீட்டிற்கு காந்திஜி வர நேர்ந்தது. அவரது வீடு கொடுமுடி என்ற ஊரில் இருந்தது.

காந்திஜிக்கு மதிய உணவை அங்கே ஏற்பாடு செய்திருந்தார், மாகாண போரட்டக் குழுவின் தலைவராக இருந்த தீரர் சத்தியமூர்த்தி.

காந்திஜியை வரவேற்று மகிழ்ந்த கே.பி. சுந்தராம்பாள், அவருக்கு ஒரு வெள்ளித் தட்டில் மதிய உணவு பரிமாறினார்.

உணவை உண்டு முடித்த காந்திஜி, கே.பி. சுந்தராம்பாளைப் பார்த்து, " எனக்கு சாப்பாடு மட்டும்தானா? தட்டு இல்லையா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

அதைக் கேட்டு முறுவலித்த கே.பி. சுந்தராம்பாள், அந்த வெள்ளி தட்டைக் கழுவி சுத்தம் செய்து காந்திஜியிடம் கொடுத்தார்.

அதை பெற்றுக் கொண்ட காந்திஜி அதனை அந்த இடத்தில் கூடியிருந்தவர்களிடம் ஏலம் விட்டார். அதன் மூலம் கிடைத்த பணத்தை சுதந்திரப் போராட்ட நிதிக்கு அளித்துவிட்டார்.

3. ஜவஹர்லால் நேரு,

நேரு செய்த விபத்து!

ஒரு சமயம் காங்கிரஸ் பிரச்சாரத்திற்காக ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, பூர்ணிமா பானர்ஜி, ஆகிய மூவரும் காரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்கள்.

காரின் சொந்தக்காரர் பூர்ணிமா பானர்ஜி. ஆனால் ஜவஹர்லால நேரு காரை ஒட்டிக்கொண்டிருந்தார்.

" நீங்கள் அதிக தூரம் காரை ஒட்டியதால் மிகவும் களைத்திருக்கிறீர்கள். "நீங்கள் ஓய்வெடுங்கள். காரை நான் ஓட்டுகிறேன்" என்றார் பூர்ணிமா பானர்ஜி.

"வேண்டாம்! எனக்குக் களைப்பு ஏதுமில்லை. காரை நானே ஓட்டுகிறேன்" என்றார் ஜவஹர்லால் நேரு.

இரவு ஒரு மணி அளவில் கார் அலகாபாத்தைச் சென்றடைந்தது.

அப்போது அருகில் அமர்ந்திருந்த லால் பகதூர் சாஸ்திரி, " என்னை ஆனந்த பவனத்தில் இறக்கி விட்டு விடுங்கள். அங்கிருந்து என் வீட்டிற்குச் சென்றுவிடுகிறேன்" என்றார்.

அந்த இரவு நேரத்தில் அவர் நேருவுக்கு சிரமம் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் நேரு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

" உங்களை உங்கள் வீட்டில் கொண்டு போய் விடுவதுதான் முறை! " என்று கூறிவிட்டுக் காரை தொடர்ந்து ஓட்டினார் நேரு.

ஓரிடத்தில் சற்றும் எதிர்பாராதவிதமாக ரோட்டில் நின்றுக்கொண்டிருந்த பசுவின் மீது கார் உராய்ந்துவிட்டது. இதனால் பசுவிற்குக் காயம் ஏற்பட்டது.

நேரு காரை நிறுத்தி விட்டு இறங்கி சுற்றிலும் பார்த்தார். யாருமில்லை. அதே சமயம் லால் பகதூர் சாஸ்திரி, பூர்ணிமா பானர்ஜியும் காரை விட்டு இறங்கி பசுவின் அருகே வந்தனர்.

"பசுவின் உடலில் இருந்து இரத்தம் கசிகிறதே" என்றார்  பூர்ணிமா பானர்ஜி,

"ஆமாம்! பசுவின் சொந்தக்காரர் இங்கிருந்தால் நடந்த்தை விளக்காலாம். ஆனால் யாரையுமே காணோமே" என்றார் நேரு.

" சற்று நேரம் பொறுத்திருந்து பார்க்கலாம்" என்றார் லால் பகதூர் சாஸ்திரி.

அந்த இருட்டில்... நடு ரோட்டில் அவர்கள் காத்திருந்தனர். சிறிது நேரம் சென்றபின் சிலர் அங்கே வந்தனர்.

நேரு அந்த பசுவை அவர்களிடம் காட்டி " இது யாருடைய பசு ?" என்று கேட்டார்.

"என்னுடையது ஐயா!" என்றார் ஒருவர்.

நேருவை அவர்கள் அனைவருமே அடையாளம் கண்டு கொண்டு மரியாதையாக நின்றனர்.

நேரு நடந்த சம்பவத்தை அவரிடம் கூறினார்.

" பரவாயில்லை ஐயா! தவறுதலாக விட்டதுதானே. பசுவிற்கு நான் சிகிச்சை செய்து கொள்கிறேன். நீங்கள் செல்லுங்கள்! " என்று பணிவுடன் கூறினார் பசுவின சொந்த
சொந்தக்காரர்.

நேரு அவரது பெயர் மற்றும் விலாசத்தைக் கேட்டுக் குறித்துக் கொண்டார். பிறகு மூவரும் காரில் புறப்பட்டனர்.

முதலில் லால் பகதூர் சாஸ்திரியை அவரது வீட்டில் இறக்கிவிட்டுவிட்டுத் தனது இல்லமான ஆனந்த பவனத்திற்கு வந்தார் நேரு. அங்கு தான் இறங்கிக் கொண்டு பூர்ணிமா பானர்ஜியிடம் காரைக் கொடுத்தனுப்பினார்.

மறுநாள் காலை முதல் வேலையாக அந்தப் பசுவின் வைத்தியச் செலவிற்காக, அதன் சொந்தகாரருக்கு 30 ரூபாயை அனுப்பி வைத்தார் மனித நேயம் கொண்ட ஜவஹர்லால் நேரு.

4. லால் பகதூர் சாஸ்திரி,

இந்த சம்பளம் போதும்!

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், லால் பகதூர் சாஸ்திரி டில்லியிலிருந்த காங்கிரஸ் காரியாலயத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு மாதம் 40 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது.

ஒரு சமயம் அவரது நண்பர் ஒருவர் அவரது வீட்டிற்கு வந்து அவரிடம் 25 ரூபாய் கடன் கேட்டார்.

அதற்கு சாஸ்திரி, " என்னுடைய மாதச் சம்பளம் 40 ரூபாய் அதை வாங்கி அப்படியே என்னுடைய மனைவியிடம் கொடுத்து விடுவேன். இதில் தான் என் குடும்பம் ஓடுகிறது. நான் இப்போது 25 ரூபாய்க்கு எங்கே போவேன்?" என்றார்.

நண்பர் ஏமாற்றத்துடன் விடைபெற்றபோது, அவரது மனைவி குறுக்கிட்டு, " சற்று பொறுங்கள்" என்று கூறிவிட்டு உள் அறைக்குச் சென்றார்.

சிறிது நேரத்தில் 25 ரூபாயை எடுத்து வந்து அந்த நண்பரிடம் கொடுத்தார்.

அதை கண்டு திகைத்த சாஸ்திரி, "உனக்கு ஏது 25 ரூபாய்?" என்று கேட்டார்.

" நீங்கள் கொடுக்கும் 40 ரூபாயில் 35 ரூபாய் வீட்டுக்காகச் செலவு செய்கிறேன். மீதம் 5 ரூபாயை சேமிக்கிறேன். அதிலிருந்துதான் 25 ரூபாய் இவருக்குக் கொடுத்தேன் " என்றார் மனைவி.

மறுநாள் காங்கிரஸ் அலுவலகம் சென்ற லால் பகதூர் சாஸ்திரி தனக்கு மாதம் 35 ரூபாய் சம்பளம் போதும் என்று எழுதிக் கொடுத்தார்.

இன்று பல ஆயிரம் சம்பளம் வாங்கியும் "போதவில்லை" என்று கொடி பிடிப்பவர்கள் அவசியம் இவரது வரலாற்றைப் படிக்க வேண்டும்.

5. டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்,

சுகாதாரமானது எது?

ஒரு சமயம் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும், இந்திய ஜனாதிபதி டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணனும் ஒரு விருந்துக்கு சென்றனர்.

மேஜை நாற்காலி போட்டு விருந்து பரிமாறப்பட்டது.

இராதாகிருஷ்ணன் கையை நன்றாக கழுவி விட்டு சாப்பிட தொடங்கினார். அவருக்கு எதிரில் அமர்ந்து இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் ஸ்பூனில் உணவை எடுத்து சாப்பிட தொடங்கினார்.

இராதாகிருஷ்ணன் கையினால் சாப்பிடுவதைக் கண்ட வின்ஸ்டன் சர்ச்சில், "என்ன இது கையினால் சாப்பிட்டுக் கொண்டு? ஸ்பூனால் சாப்பிடுங்கள் அதுதான் சுகாதாரமானது" என்றார்.

அதற்கு இராதாகிருஷ்ணன், "இல்லை ! இல்லை! கைதான் மிகவும் சுகாதாரமானது. ஏனென்றால் எனது இந்த கையை என்னைத் தவிற வேறு யாரும் சாப்பிடுவதற்கு உபயோகப்படுத்த முடியாதல்லவா!" என்றர்.

அதை கேட்ட வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு கணம் அதிர்ந்து போனார்.

No comments:

Post a Comment

AdSense-03