உடற்பயிற்சி.. - தமிழ் DUNYA

தமிழ் DUNYA

தமிழ் இனத்தின் சங்கமம்

Breaking

AdSense-02

04/12/2018

உடற்பயிற்சி..


வாழ்கைக்கு நிம்மதி, சுகம், சந்தோஷம், உற்சாகம் முதலானவை தேவை. அதற்கு ஆரோக்கியம் மிகவும் அவசியம். ஆரோக்கியமாக இருப்பதற்கு உழைப்பு அல்லது உடற்பயிற்சி தேவை. பண்டைக்கால வாழ்க்கையில் தினசரி கடமைகளில், உடற்பயிற்சி இணைந்திருந்தது. அந்நாளில் வீட்டு வேலைக்கென்று வேலைக்காரர்கள் அவ்வளவாக கிடையாது. கூட்டுக்குடும்பமாக இருந்தது, அதற்கான காரணங்களுள் ஒன்று. போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்த காரணத்தால் ஆண்கள் தொழிலுக்கு நடந்தே போய் வருவார்கள். பெண்கள் வீட்டு வேலைகள் அனைத்தையும் கவனித்துக் கொள்வார்கள். அனைவரும் ஆரோக்கியமாக இருந்தனர். மருத்துவர்களும் வெகு குறைவு. மருத்துவமனைகள் விரல் விட்டு எண்ணக் கூடியவையாக இருந்தன. இது அந்நாளைய நிலை.

தற்போது ஏற்பட்டுள்ள விஞ்ஞான வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், புதிய, புதிய கண்டுபிடிப்புகள் முதலானவை வாழ்க்கை முறையையே மாற்றியமைத்துள்ளன. இவை வாழ்க்கையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து வருகின்றன என்பது ஒருபுறம் இருக்க; மறுபுறம், பல்வேறு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பது, அனுபவ உண்மை. அவற்றுள் ஒன்று ஆண் பெண் இருபாலருக்குமே போதிய தேவையான உடற்பயிற்சி தவிர்க்கப்பட்டுவிட்டது. காரணம் நேரமின்மை. காலை முதல் இரவு வரை அவர்கள் உழைக்கும் உழைப்பு உடற்பயிற்சி ஆகாது.

தற்போது மக்களின் வாழ்க்கை முறை, வெகுவாக மாறி இருந்தாலும், சுகம், சவுகரியங்கள் பெருகியிருந்தாலும், அவற்றை மக்கள் இரசித்து வாழ்ந்த போதிலும், நம் முன்னோர்கள் அனுபவித்த ஆரோக்கியம் தற்போது இல்லை என்றே சொல்ல வேண்டும். இல்லையெனில், எண்ணற்ற மருத்துவமனைகளும், எண்ணற்ற மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் பெருகி இருக்க வேண்டிய அவசியமென்ன?. இதுவரை இல்லை என்றாலும் இனியாவது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை துவங்குவது நல்லது.


வீட்டிலிருந்தபடியே லேசான உடற்பயிற்சி        ( Simple Exercise) செய்யலாம். யோகாசனம் பழகலாம். நடைபயிற்சி மேற்கொள்ளலாம். மற்றும் குதித்து ஓடுதல் (Jogging), ஓடுதல்(Running), முதலான உடற்பயிற்சிகளையும் செய்யலாம்.
வாராந்திர விடுமுறையின்போது நீச்சல், பேட்மிட்டன் போன்றவற்றில் கலந்து கொள்ளலாம். அவரவர்களது வசதி, வேலை நேரம், மற்ற வேலைகள் இவைகளுக்கேற்ப இந்த பயிற்சிகளை அமைத்துக் கொள்ளலாம்.

குறிப்பாக, குதித்து ஓடுதல், ஓடுதல் நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளை 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தவிர்ப்பது நல்லது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அலுவலகங்களிலும் சரி, வீட்டிலும் சரி, பெரும்பாலான நேரத்தை கணினி ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கைவிரல்கள், கண்கள், மட்டும் வேலை செய்வதனால் உடல் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுகின்றன என்பது மருத்துவர்களின் அபிப்பிராயம்.
விரல் நுனியில் இயங்கக்கூடிய மென்மையான நரம்புகள் நீண்ட நேரம் ஊக்குவிப்பதனாலும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதனால் கால், கை, மூட்டுகள், ஜீரண உறுப்புகள் முதலானவை பாதிக்கப்படக்கூடும். எனவே இப்படி இந்தத் துறையில் இருப்பவர்கள், பணிபுரிபவர்கள் முதலானோர் அவ்வப்போது, இடத்தை விட்டு எழுந்து, சற்று காலாற நடந்துவிட்டு வருவது நல்லது. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் கணக்காளர், வக்கீல், வழக்கறிஞர் முதலானோர்க்கும் இந்த பிரச்சனை வரக்கூடும். அவர்களும் அவ்வப்போது இடையே எழுந்து சற்று நடந்து விட்டு வருவது நல்லது. மற்றும் சிலர் அலுவலகமே தன்னால் தான் 'முறையாக' இயங்குகின்றன என்ற நோக்கத்தில், அலுவலகமே கதி என்று இருப்பவர்களும் உண்டு. ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறவர்கள், எல்லோரையும் போல பணிமுடித்ததும், வீடு சென்று ஓய்வெடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும். இடை இடையே அவ்வப்போது எழுந்து நடந்து விட்டு வருவது ஒருவகையான ஓய்வு என்ற போதிலும், அந்த நடைபயிற்சி, பிரச்சனைகளை தவிர்க்க உதவக்கூடிய ஒரு சிறிய உடற்பயிற்சியாகும்.

உடற்பயிற்சி, உழைப்பு, ஓய்வு இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை, பிணைந்தவை. தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். உற்சாகம் தோன்றும். இவற்றைக் கொண்டு உழைக்கலாம். உழைத்த பின் போதிய ஓய்வு தேவை. இந்த முறையில் தடை ஏற்பட்டாலும் சரி, தவறு நிகழ்ந்தாலும் சரி அதனால் விளையக்கூடியவைதான், மன அழுத்தம் மன உளைச்சல் போன்ற உபாதைகள். வாழ்க்கையின் நோக்கமே நிம்மதியாக, சுகமாக, சந்தோஷமாக இருப்பது. உற்சாகமாக அனைத்திலும் பங்குகொள்வதும்தான். முறையாக உடற்பயிற்சி அதாவது, உடல் உறுப்புகளுக்கு போதிய வேலை இருந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம். ஆரோக்கியமாக இருந்தால் இவையனைத்தையும் பெறலாம்.

உடற்பயிற்சி செய்வதால் ஆரோக்கியத்துடனும், சுகம், சந்தோஷத்துடனும், இருப்பதுடன் ஆண், பெண் இருபாலருக்குமே ஆயுள் கூடுகின்றன என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.
பண்டைய நாளில் இயற்கை ஆரோக்கியத்தை அளித்தன. ஆனால் தற்போது ஆரோக்கியத்தை நாம் முயற்சித்துதான் பெற வேண்டும். ஏனெனில் காற்று முதல் மற்ற உணவுப் பொருட்கள், பழங்கள் அனைத்தும் மாசுபடிந்து இருப்பதுடன் கலப்படம் நிறைந்ததாக உள்ளதே இதன் காரணம்.


எங்கு திரும்பினாலும் உடற்பயிற்சி, உடற்பயிற்சி என்கிறார்களே என்று அங்கலாய்த்துக் கொள்ளவேண்டாம். உடற்பயிற்சி செய்வதால் ரத்த ஓட்டம் முறையாக இருக்கும். உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்படும். மலச்சிக்கல், மூட்டு வலி, அஜீரண கோளாறு முதலானவைகளைத் தவிர்க்கலாம். சர்க்கரை வியாதி, கொலஸ்ட்ரால், உடல் பருமன் முதலானவற்றை கட்டுப்படுத்தலாம். உற்சாகத்துடனும், சுறுசுறுப்புடனும் இருக்கலாம். இரவில் நன்றாக தூக்கம் வரும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வாழ்க்கையில் தன்னம்பிக்கையும், தெளிவும் ஏற்படும். இவ்வளவு தன்மைகள் உள்ளன.

இயற்கையான சூழ்நிலை கூடிய, இனிய, எளிய வாழ்க்கையில், உள்ள சுகம், செளகரியம் முதலானவற்றை வேறு எதிலும் காணமுடியாது. அனைவருடனும் அன்பாக இருப்பது, பண்புடன் நடந்து கொள்வது, நல்லதை எண்ணுவது, நல்லதை பேசுவது, நல்லதையே செய்வது முதலானவைகளே ஓரளவுக்கு வாழ்க்கையில் சுகத்தையும், சந்தோஷத்தையும் தரும். நம்மிடம் உள்ளதை கொண்டு திருப்தியடைய வேண்டும்.
ஆசை, பேராசை, பொறாமை இவைகளே வாழ்க்கையின் நிம்மதியை குலைப்பவை.

வெட்டிப் பேச்சு, வீண் பேச்சு, அக்கப்போர், பத்திரிக்கை, திரைப்படம், தொலைக்காட்சி இவற்றில் வரும் எதிர்மறையான நிகழ்வுகள், வன்முறைகள் முதலானவற்றை தவிர்த்தாலே ஓரளவுக்கு பிரச்சனையின்றி வாழலாம். நல்லவர்களுடன் பழக வேண்டும். நல்ல, நல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். அடிக்கடி வெளியூர் பயணம் சென்று வர வேண்டும். இவைகள் வாழ்க்கையில் ஒரு தெம்பையும் புத்துணர்ச்சியையும் தரும்.

பெண்கள் வீட்டு வேலைகள் செய்வதே ஒரு உடற்பயிற்சி எனலாம். அவர்கள் தனியாக ஏதேனும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.
"ஜிம்முக்கு" செல்லும் பெண்களில் பெரும்பாலோர் வீட்டுவேலைகளைத் திரும்பியும் பார்க்க மாட்டார்கள். அதுமட்டுமல்ல, ஜிம்முக்கு சென்று வருவது ஒரு கௌரவம். ஆண்களுக்கு சிறிது உடற்பயிற்சி அவசியம். சிறிது சிரமம் சுகத்தையும், ஆரோக்கியத்தையும் தரும். அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழுங்கள்.

வாழுங்கள் வளமுடன் வாழுங்கள் நலமுடன்.
நன்றி மீண்டும் சந்திப்போம்..!

No comments:

Post a Comment

AdSense-03