அன்புக்கு நேரமில்லை.. - தமிழ் DUNYA

தமிழ் DUNYA

தமிழ் இனத்தின் சங்கமம்

Breaking

AdSense-02

03/12/2018

அன்புக்கு நேரமில்லை..


நேரத்தை வீணடிக்காதே.!
ஓடுவது முள் அல்ல.! உன் வாழ்க்கை..!


என்கிற சுவாமி விவேகானந்தரின் வரிகளில் உள்ள நேரத்தின் அருமையை நம்மால் உணர்ந்து கொள்ள முடியுமானால், ஒவ்வொரு நொடியின் பெருமைகளையும் நாமும் உணர்ந்து கொள்ள ஆரம்பித்துவிட்டோம் என்பதுதான் பொருளாகும்.

ஆனால், எல்லா நேரங்களிலும், எல்லாவிதமான சூழல்களிலும் நாம் நேரம் பற்றிய ஒரே விதமான கோட்பாட்டை தான் கடைப்பிடிக்க வேண்டுமா? அப்படி கடைப்பிடிப்பது சரியான வழிமுறைதானா?

இந்த மாதிரியான கேள்விகளும் கூட நம் மனதில் உதிக்கத்தான் செய்கின்றன. ஆனால், இவற்றுக்கான பதில்களை நாம் தான் தேடி கண்டுபிடித்து நமக்குள் ஒரு தெளிவை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

உதாரணமாக..

சொந்த பந்தங்களுக்காகவும், நட்புகளுக்காகவும், ஒதுக்கக்கூடிய நேரத்தை நாம் கணக்கிட்டு செலவழிக்க நினைப்பது சரியான முறையில்லை என்பது என்னுடைய கருத்து.

ஏனெனில் அவர்களிடத்தில் நம்முடைய உள்ளத்தில் இருக்கும் அன்பை முழுமையாக பகிர்ந்துகொள்ள நொடிகளும், நிமிடங்களும், நாட்களும், வாரங்களும், மாதங்களும், போதாது என்பது தான் யதார்த்தம்.

இன்னும் சரியாக சொல்லபோனால், ஆண்டுகளும் கூட போதாது என்பதே உண்மை. ஆனால், நம்மில் எத்தனை நம்மைச் சார்ந்தோரிடம் அவர்கள் மீது நாம் கொண்டுள்ள அன்பை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறோம்? அன்பு கொள்ளுதலை விட, அன்பு கொள்ளப்படுதலை விட, அதை மிகச்சரியான நேரத்தில், மிகச்சரியான தொனியில் வெளிப்படுத்துவதுதான் உண்மையான மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாகும்.

இந்த நேரத்தில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும் அதனுள் இழையோடிய ஒரு தந்தை-மகனுக்கான இடையே உள்ள ஆழமான அன்பின் பிணைப்பையும், அதனை வெளிப்படுத்த அவர் தேர்வு செய்த சரியான காலச்சூழலையும் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன்.

இவ்வாண்டில் பத்தாம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகள் வெளியாகிய போது ஒரு தந்தை தன் மகனை கொண்டாடியவிதம் பத்திரிகைகளில் மற்றும் தொலைக்காட்சிகளில் மூலம் தெரிந்த பொழுது வியப்பாக இருந்தது.

மத்திய பிரதேசத்தில் சாகர் என்னும் மாவட்டத்தில் வசித்து வருபவர் திரு.சுரேந்திரகுமார் வியாஸ் என்பவர். இவர் கட்டிட காண்ட்ராக்டர் தொழில் செய்து வருகிறார். இவரது அன்பு மகன் அன்ஷு என்பவர் அங்குள்ள பள்ளியொன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அவர் இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வை எழுதிவிட்டு முடிவுகளுக்காகக் காத்திருந்தார்.

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெளியாகின இதில் எதிர்பாராதவிதமாக மாணவர் அன்ஷு தோல்வியடைந்துவிட்டார்.

இதனால் அன்ஷு வேதனையடைந்தது மட்டுமல்லாமல் தந்தையும், உறவினர்களும் என்ன சொல்வார்களோ என்று கவலையடைந்திருந்தார். தந்தை இதற்காக கடுமையாக தண்டிக்கப் போகிறார் என்று மிகவும் பயந்து போயிருந்தார் அன்ஷு.

ஆனால், அன்ஷுவுக்கு தந்தையின் செயல் மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது என்று சொல்லலாம். தன்னுடைய மகன் தேர்வில் தோல்வியடைந்தது பற்றி எந்த உணர்வையும் வெளிப்படுத்தாத தந்தை திரு.சுரேந்திரகுமார் மகன் அன்ஷுவை அழைத்து தன் பக்கத்தில் உட்கார வைத்து தலையில் தடவி கட்டியணைத்துக் கொண்டார்.

பின்பு "பரவாயில்லை மகனே! விடு! இந்த தோல்வியைப் பற்றி மிகவும் பெரிதாக எண்ணி கவலைப்படாதே! வருத்தப்படாதே! இதைக் கடந்து வந்து வெற்றி கோடுகளை தொடு! என்று ஆறுதல் வார்த்தைகள் சொல்லியிருக்கிறார்.

அதோடு மட்டும் விட்டுவிடாமல் தன் மகனின் தோல்வியை கொண்டாடும் விதமாக, தனது உறவினர்கள், நண்பர்கள், மகனின் நண்பர்கள், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவரையும் அழைத்து, பட்டாசுகள் வெடித்து, விருந்தளித்து பிரமாண்டமாக கொண்டாடியிருக்கிறார்.

இதன் பின்னர் தந்தை திரு.சுரேந்திரகுமார் தன்னுடைய இந்த செயலுக்கான காரணத்தை அனைவர்களிடமும் சொல்லியிருக்கிறார்.

அது என்னவென்றால், "எனது மகன் அன்ஷு ஒரு நல்ல அறிவாளி, அவன் தன்னுடைய தேர்வுக்காக கடுமையாக உழைத்துப் படித்தான். தேர்வையும் சிறப்பாகவே எழுதினான். ஆனாலும், அவன் தேர்ச்சி பெறவில்லை. ஆனால் நான் அவனுடைய தோல்வியைப் பற்றி பெரிதாக எதுவும் நினைக்கவில்லை காரணம், தோல்வியென்பது நிலையானதல்ல என்பது என் கருத்து."

பொதுவாக, தேர்வுத் தோல்வி என்பது குழந்தைகளின் மனதைப் பெரிதும் கலங்க வைக்கும். அதைப்பற்றி அதிகம் வருத்தப்படுவார்கள். அதையே பெரிதாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையின் இறுதி முடிவை எடுக்கக்கூட எண்ணுவார்கள்.

நம் பிள்ளைகள் அந்த மாதிரியான முடிவை எடுக்கக் கூடிய சூழல் உருவாக நம்மை போன்ற பெற்றோர்கள் இடம் தரக்கூடாது. ஏனென்றால், பத்தாவது தேர்வின் தோல்வி என்பது வாழ்கையின் கடைசி விஷயமல்ல. சொல்லப்போனால் அந்த பிள்ளைகள் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர் கொள்ளவதற்கான முதல் படிக்கட்டு இதுதான்.

எனவே, முதல் தோல்விக்கு பயந்து தோல்வி மனநிலையை உருவாக்கிக் கொள்வது அவசியமற்றது என்பதை என் மகனுக்கு உணர்த்தவும், அவனை அடுத்த வெற்றிக்கு உற்சாகப்படுத்தவுமே இதைச் செய்தேன். இதன் மூலமாக அடுத்த ஆண்டில் அவன் கடுமையாக உழைத்து நிச்சயமாக வெற்றி பெறுவான் என்று தெரிவித்திருக்கிறார்.


தன்னுடைய தந்தையின் ஆதரவான மற்றும் உற்சாகமூட்டும் செயலால் நெகிழ்ந்து போன மகனான அன்ஷு, "நான் என்னுடைய தந்தையும் அன்பையும், அவர் என்மீது கொண்டுள்ள அக்கறையும் நினைத்து நெகிழ்கிறேன். இந்த செயல் மூலமாக என் தந்தை மிக உயரிய வாழ்க்கைப் பாடத்தை எனக்கு கற்றுத் தந்திருக்கிறார். நான் அடுத்த ஆண்டில் மிக நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி அடைவேன்" என்று தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பொதுவாக, தேர்வில் தோல்வியடைந்தவுடன் பிள்ளைகளை திட்டித் தீர்க்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் தோல்வியடைந்தாலும் தன் மகன் வருந்தக்கூடாது.. அவனுக்கு வெற்றியும், தோல்வியும் வாழ்வில் சகஜமானவையே என்பது புரிய வேண்டும். என்று நினைத்தபடி மகனுக்கு ஆதரவூட்டும் வகையிலும், எதிர்காலத்தைப்பற்றி நம்பிக்கையூட்டும் வகையிலும் பேசிய தந்தையின் செயல்பாடு மிகவும் வியப்புக்குரியது.

அது மட்டுமல்ல.. அந்த மகனுக்கு நல்லதொரு நண்பன் கிடைத்திருக்கிறான் என்பதை அந்த தந்தை உலகத்திற்கு உறுதிப்படுத்தியிருக்கிறார்.
நன்றாக யோசித்துப் பாருங்கள்.
தேர்வின் தோல்வியில் இருந்தும் கூட ஒரு தந்தை தன் மகனையும், அவனுடைய எதிர்கால நம்பிக்கையும் மீட்டெடுக்கிறார் என்று சொன்னால், அந்த தந்தை தன் மகனை எந்த அளவு நேசித்திருப்பார்?

அந்த நேசத்தை மிகச் சரியான நேரத்தில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதுதான் என்னுடைய எண்ணம். ஏனென்றால், நேசத்தையும், அன்பையும் நெஞ்சுக்குள் பூட்டி வைத்துக் கொள்வதால் எந்த பலனும் வாய்ப்பதில்லை.

அந்த அன்பை வெளிப்படுத்திக் கொள்ள கூட நேரம் ஒதுக்காமல் வேகமாய் செயல்பட்டு வாழ்க்கையில் எதை நாம் பெரிதாகச் சாதித்து விடப் போகிறோம்.?

யோசித்துப் பார்த்தால், அந்த தந்தை தன் மகனுக்கும், இந்த உலகத்துக்கும் மிக உன்னதமான உளவியல் பாடமொன்றை நடத்தியிருக்கிறார் என்பது புரியும்.
அந்தப் பாடம் இலட்சம் ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத பாடம்.

இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் ஒருவேளை..

"நீங்கள் தேர்வில் தோல்வியடைவதை ஆதரிக்கிறீர்களா? மதிப்பெண்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானவை என்பதை மறுக்கிறீர்களா?" என்றும் கூட என்னிடம் கேள்விகள் கேட்கக்கூடும்.
மதிப்பெண்கள் என்பவை வாழ்க்கையில் மிக முக்கியமானவைதான். நான் ஒருபோதும் மறுக்கவில்லை.. ஆனால், மதிப்பெண்களை விடவும் "வாழ்க்கை" மிக முக்கியம் என்பதை உணர்த்த விரும்புகிறேன்.

வாழ்க்கை என்பது மதிப்பெண்களில் ஒளிந்திருப்பதில்லை!

என்பதையும் இங்கே பதிவு செய்யவும் விரும்புகிறேன். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்ற வள்ளுவனின் வாக்கின்படி அந்த தந்தை தன் பிள்ளைக்கு எந்த தோல்வி வந்தாலும் கலங்காதே! உன்னோடு நான் இருக்கிறேன்! உன் முயற்சிகளை கைவிடாதே என்ற நம்பிக்கையையும், அன்பையும் ஒருசேர அள்ளித்தந்திருக்கிறார். அதுதான் அந்த நேரத்தில் அந்தப் பிள்ளைக்குத் தேவையானது.

ஏனெனில், தன் தந்தை தன்மேல் கொண்டுள்ள அன்பினை முழுமையாக புரிந்து கொண்ட அந்தப்பிள்ளை இனி எதற்காகவும் ஆச்சப்படமாட்டான். மதிப்பெண்களையும் மகத்தான முறையில் வென்றெடுப்பான்.

தன்னுடைய தந்தை தன் பக்கத்தில் இருக்கிறார் என்பதை புரிந்துகொண்ட பிள்ளைகளே பாக்கியவான்கள்!
தன் தந்தையின் பெயரைக் கொண்ட எதிரி நாட்டு வைத்தியன் ஒருவனின் மருந்தைக் கூட சந்தேகப்படாமல் குடித்து உயிர் பிழைத்ததாக மகா அலெக்சாண்டரின் வாழ்க்கையில் ஒரு சம்பவம் இடம்பெறும். அதுபோன்ற மகத்துவங்களை நிகழ்த்தக் கூடிய அன்பு முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் என் கருத்து.


மாறாக, அந்த அன்பைக் கூட வெளிக்காட்ட எனக்கு நேரமில்லை.. என்று ஒருவர் சொல்வதெல்லாம் வேடிக்கையான காரணங்களேயன்றி உண்மையாக இருக்க ஒரு போதும் வாய்ப்பில்லை.
எனவே, நம்மை சுற்றி உள்ளவர்களை முழுமனதுடன் நேசிப்போம்! அதற்காக சரியான முறையில் நேரங்களைப் பங்கிட்டுக் கொள்வோம்! அந்த அன்பை முழுமையாக வெளிப்படுத்துவதிலும் அக்கறை காண்பிப்போம்!

ஏனென்றால், நம்மை நேசிப்பவர்களின் அன்பையும், நேரவுணர்வையும் ஒன்றிணைத்தால், கிடைக்கக்கூடிய வெற்றிகள் மிக மகத்தானவையாகத் திகழும் என்பதில் ஐயமில்லை..

நன்றி மீண்டும் சந்திப்போம்..!

No comments:

Post a Comment

AdSense-03