என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? புதிய தொடர், - தமிழ் DUNYA

தமிழ் DUNYA

தமிழ் இனத்தின் சங்கமம்

Breaking

AdSense-02

10/12/2018

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? புதிய தொடர்,



திசை தேடும் பறவை,
எட்டுத் திசையும் எட்டும் திசை,

வானம் முழுவதையும் வட்டமடித்து அளந்து விடும் வலிமையோடு பறந்து கொண்டிருக்கின்றன அந்தப் பறவைகள். எல்லைகளற்று பரந்து விரிந்து கிடக்கும் வெளியில் நீரைக் கிழித்து நீந்த்திக் கொண்டே இருக்கின்றன அந்த பறவைகள்.

பறவைகளுக்கான இலக்குகள் திசைதோறும் சிதறிக் கிடக்கின்றன. பறவைகளுக்குத் தான் குழப்பம். எந்த இரையைத் தேர்ந்த்தெடுப்பது? எப்போது தேர்ந்தெடுப்பது?

அந்த பறவைகளுக்குத் திசை காட்டத்தான் இந்தத் தொடர். ஆம், அந்த பறவைகள் மாணவர்களாகிய நீங்கள் தான். உங்களுக்கு இலட்சிய பாதையை உருவாக்கிப் படைக்கவே இந்தத் தொடர்.

ஒரு மின்னலின் வேகத்தில் வேகமாக மாறிக் கொண்டே இருக்கின்றன உலகம். கண நேரம் மின்னி மறையும் ஒவ்வொரு மின்னலின் ஒளியிலும் உங்களுக்கான ஒரு வாய்ப்பு உங்கள் வீட்டின் கதவைத் தட்டிக் கொண்டே இருக்கிறது.

அந்த வாய்ப்புகளை வளைத்துக் கொண்டால் போதும். வானம் வசப்பட்டு விடும். அப்படி வானத்தை வளைத்து வசந்த காலத்தை வரவழைப்பது என்பது ஒரு பெரிய மாய வித்தையல்ல. " தொலைநோக்குப் பார்வை " என்ற ஒற்றை வரி தான் வானத்தை வசப்படுத்தும் தாரக மந்திரம்.

இந்த ஆட்டத்தில் நான் உங்களுக்கு வீசப் போகும் பந்து, உங்களை அவுட் ஆக்குவதற்கு அல்ல. மாறாக "சிக்சர்" அடிப்பதற்கு. எதிர் வரும் பந்துகளை எதிர்கொண்டு நீங்கள் தடுப்பாட்டம் ஆடக்கூடாது. அடித்து ஆடினால் தான் சாதனைகள் சாத்தியமாகும்.

ஆயிரக்கணக்கான படிப்புகள் சந்தையில் நிறைந்து கிடக்கின்றன. நம் கண்முன் இருக்கும் வாய்ப்புகளை அல்லது படிப்புகளை அலசி ஆராய்ந்து இந்த சூழ்நிலையில் எந்தப் படிப்பு? ஏற்றப் படிப்பு? என்று உங்களால் முடிவு செய்ய முடிந்தால் முதல் கட்டத்திலேயே உங்களுக்கு செஞ்சுரி காத்திருக்கிறது.

எந்த படிப்பைத் தேர்ந்தெடுப்பது என்பதை விட ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து விட்டால் போதும். நீங்கள் வெற்றியாளர் தான்.


என்ன படிக்கலாம்? ஏன் படிக்கலாம்?

பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு பிறகு தங்கள் பிள்ளைகளை மேற்கொண்டு என்ன படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் இப்போது பெற்றோர்களுக்கு பெரிய சவாலாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான படிப்புகள் சந்தையில் நிறைந்து கிடக்கின்றன. அத்தகைய படிப்புகளில் எதை தேர்ந்தெடுப்பது? என்ன படித்தால் வேலை கிடைக்கும்? எதிர்காலம் சிறப்பாக அமையும்? என்ற கேள்விகளை எடுத்துக்கொண்டு பெற்றோர்கள் ஆலோசனை கேட்கிறார்கள். ஏதோ ஒரு படிப்பை படித்து விட்டு அதற்கேற்ற வழியைத் தேடுவதுதான் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது. இதற்கு மாற்றாக சந்தையில் கிடைக்கக்கூடிய வேலைகளுக்கு என்ன படிப்பு படிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால் போதும் பெற்றோர்களின் மில்லியன் டாலர் கேள்விக்கு விடை கிடைத்துவிடும்.

ரோபோ மயமாகும் துறைகள்..!

பெரிய நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை ஒரு நொடியில் கூண்டோடு வெளியில் அனுப்பி விட்டு அதற்கு பதிலாக நவீன கம்ப்யூட்டர்களை பணியில் அமர்த்தி விடுகின்றன. இன்னும் அட்வான்ஸாக போய்க் கொண்டிருப்பவர்கள் மனிதர்களே இல்லாத நிறுவனங்களை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டு உருவாக்கி வருகின்றனர். இந்த வகை நிறுவனங்கள் மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்களை பணியமர்த்தி வருகின்றன. எங்கும் இயந்திரம் என்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. திருப்பதி லட்டு தயாரிப்பு கூட இயந்திரம் ஆகிவிட்டது. ஃபிலிம் ரோல் ஃபேக்டரி தயாரிப்பை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டது. வேலைவாய்ப்புக்கு அறிவியல் முன்னேற்றம் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருந்தாலும் கூட இன்னொரு பக்கம் மனித குலத்திற்கான மிகப்பெரிய தேவை இருந்துகொண்டே இருக்கிறது. காரணம் தேவைப்படும் பணிகளுக்கான மனிதவளம் உருவாக்கப்படவே இல்லை.


ரேஸ் குதிரைகளை மட்டும் தயார் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் உலகத்திற்கு தேவை போர்படை குதிரைகளும், பாரம் இழுக்கும் குதிரைகளும் தான். தேவையான மனிதவளம் எது? சில ஆச்சரியமான உதாரணங்களைப் பாருங்கள். மொபைல் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையும், கம்ப்யூட்டர்,லேப்டாப் இவற்றோடு பணிபுரிபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே இன்னும் 5 ஆண்டுகளில் கண்பார்வை பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இப்போது இருப்பதைவிட 2 மடங்கு அதிகரிக்கப்போகிறது. எனவே இன்னும் 5 ஆண்டுகளில் கண் மருத்துவத்துறை ஏராளமான வேலை வாய்ப்புகளை வாரி வழங்கப் போகிறது. அதுபோல ஆப்டிகல்ஸ் பிசினஸ் செய்பவர்களும் கோடிகளை குவிக்க போகிறார்கள்.

எ.டி.எம். படிப்புகள்,

பணமில்லா பரிவர்த்தனை இன்னும் தீவிரப்படுத்தப்படும். எதிர்காலத்தில் முழுமையாக பணமில்லா பரிவர்த்தனை கொண்டுவரப்படும். இந்தியா முழுவதும் அனைத்து வங்கிகளும், இன்னும் லட்சக்கணக்கான ஏடிஎம் மெஷின்களை நிறுவப்போகின்றன. எனவே இந்த ஏடிஎம் மெஷின்களை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு கண்ட்ரோல் எஞ்சினியர்கள் தேவை அதிகரிக்கும். "எலக்ட்ரானிக் இன்ஸ்ட்ரூமென்டேஷன்" படிப்பில் பொறியியல் பட்டம் படிப்பவர்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் இத்துறையில் காத்திருக்கிறது. இன்ஜினியரிங் மெக்கானிக்கல், சிவில், பிரிவுகளில் பொறியியல் பட்டம் பெற்றவர்களை ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் வலைவீசித் தேடிக்கொண்டிருக்கின்றன. பொறியியல் பட்டங்களோடு கூடுதலாக ஜப்பான் அல்லது ஜெர்மன் மொழியை ஓரளவு எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும் அந்தந்த நாடுகள் நடத்தும் மொழித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று நல்ல சம்பளத்துடன் வேலைக்கு போய் விடலாம்.

மாற்று மருத்துவம்,

மருத்துவத்துறையை எடுத்துக் கொண்டால் பல் மருத்துவத்திற்கு வேலை வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன. அதேசமயம் சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி ஆகிய மருத்துவப் படிப்புக்கு நாளுக்கு நாள் மவுசு கூடிக்கொண்டே போகிறது. அதுபோலவே ஸ்பீச் தெரபி, ஹியரிங் தெரபி போன்ற படிப்புகளுக்கு உடனடி வேலை வாய்ப்புகள் உள்ளன. பயோடெக்னாலஜி, பயோமெடிக்கல், போன்ற படிப்புகளை பெண்கள் ஆர்வமுடன் படிக்கிறார்கள்.
தமிழ் கலாச்சாரத்தில் வளரும் பெண்களுக்கு இவ்வகை படிப்புகள் ஒத்துவருவதில்லை. ஏனெனில் இவை ஆராய்ச்சி படிப்புகள். தொடர்ந்து பட்ட மேற்படிப்பு படித்து முனைவர் பட்ட ஆய்வு வரை முடித்தால் தான் இத்துறைகளில் பெண்கள் சாதிக்க முடியும். ஆனால் அப்படி படிக்க வைக்க பெற்றோர்கள் விரும்புவதில்லை.


அசரடிக்கும் ஆங்கிலம்,

பி.ஏ.ஆங்கிலம் படிப்பது ஏதோ மொழி சார்ந்த படிப்பு என்றே பலரும் கருதுகின்றனர். ஆனால் பி.ஏ.ஆங்கிலம் என்பது அறிவியல் வளர்ச்சியோடு சம்பந்தப்பட்டது. புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை எப்படி பயன்படுத்துவது என்ற மேனுவல் தயாரிக்க ஆங்கிலம் படித்தவர்கள் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள்.
எலக்ட்ரிக் ஸ்டவ் கண்டுபிடிக்கிறார்கள். வீட்டில் சமையல் செய்யும் பெண்கள் இந்த எலக்ட்ரிக் ஸ்டவ் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று எழுதி சிறிய புத்தகமாக்கித் தருவதற்கு ஆங்கிலம் படித்தவர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு "டெக்னிக்கல் ரைட்டர்ஸ்" என்று பெயர்.

உளவியல் படிப்புகள்,

உளவியல் படிப்புகளுக்கு உற்சாகமான வரவேற்பு உள்ளது என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கான உளவியல், மருந்துகளைப் பற்றிய உளவியல், கல்வி உளவியல், ஆகிய படிப்புகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிப்பவர்களுக்கு டாக்டர்களை விட அதிக டிமாண்ட் இருக்கிறது. அனைத்துத் துறைகளுக்கும் மனநல ஆலோசகர்கள் தேவைப்படுவதால் உளவியல் படிப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு சந்தையில் ஏக கிராக்கி.

பொருளாதாரம்,

தேசிய திட்டக்குழு, மாநில திட்டக்குழு, மத்திய ரிசர்வ் வங்கி போன்றவற்றில் பொருளாதாரம் படித்தவர்களுக்கு தேவை உள்ளது. எம்.பி.ஏ பொருளாதாரம் படிப்பது நல்ல எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும். ஆனாலும் இன்று பொருளாதாரம் படிப்பதற்கு பிளஸ்டூ அளவில் ஏதேனும் ஒரு கணித பாடத்தை படித்திருக்க வேண்டும். என்று கல்லூரிகள் எதிர்பார்க்கின்றன. எனவே பத்தாம் வகுப்பிற்கு பிறகு "பியூர் ஆர்ட்ஸ்" வகுப்பில் சேராமல் கணிதப்பாடம் இருக்கிற படிப்புகளில் சேருவது நலம் பொருளாதாரம் படிப்பவர்களுக்கு 100% வேலை வாய்ப்புகள் உண்டு.


ஆடிட்டிங் படிப்புகள்,

சி.ஏ.படிப்புக்கு நிகரானது சி.எம்.ஏ படிப்பு.
சி.ஏ.படிப்பிற்கு நிகரான வேலைவாய்ப்பு இந்த படிப்புக்கும் கிடைக்கும்.

அனிமேஷன், கிராபிக்ஸ், டிசைன்ஸ், போன்ற துறைகளில் பட்டம், பட்டயம் படிப்பவர்களுக்கு சினிமா, டி.வி மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி பாடங்களை தயாரிப்பதில் கல்வித்துறையில் உடனடி வேலை வாய்ப்புகள் உள்ளன. கப்பல் துறையில் மெயின்டன்ஸ் வேலை பார்க்க விரும்புவர்கள் மரைன் சயின்ஸ் படிக்க வேண்டும். கப்பல் கட்டும் துறையில் பணிபுரிய விரும்புவர்கள் நாட்டிக்கல் சயின்ஸ் படிக்க வேண்டும்.

சைபர் செக்யூரிட்டி,

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி திருடுவதும். நவீன தொழில்நுட்பங்களையே திருடுவதும் தற்போது அதிகரித்து வருவதால் இவற்றை தடுப்பதற்கான பணியிடங்கள் பொதுத்துறை, தனியார்துறை நிறுவனங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. எம்.எஸ்.சி யின் புதிய வரவான சைபர் செக்யூரிட்டி படிப்பிற்கு இந்த துறையில் கைமேல் பலன் கிடைக்கும்.


இராணுவ இரகசியம்,

இராணுவத்தில் வேலை என்றாலே நாம்
உடல் தகுதித் திறன், கண்பார்வை திறன், நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மை நிலை அப்படியல்ல சிப்பாய் வேலைகளுக்கு தான் உடல் தகுதி அவசியம். மற்றபடி தொழில்நுட்பம், மேலாண்மை சார்ந்த பணிகளுக்கு உடல்திறன், பார்வை திறன் போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.

பிளஸ் டூ படிப்பிற்கு பிறகு எஸ்.எஸ்.பி தேர்வில் வெற்றி பெற்று நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் படித்த பின்பு இராணுவத்திலேயே வேலைக்குச் சேர்ந்துவிடலாம். நர்சிங், இன்ஜினியரிங், மருத்துவம், ஆகிய படிப்புகள் இராணுவ நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. இங்கு படிக்கும்போதே பாக்கெட் நிறைய உதவி தொகையும் வழங்குகிறார்கள். சந்தையில் கிடைக்கிற வேலைகளுக்கு என்ன படிப்பு படிக்க வேண்டும் என்பதைக் கண்டுபிடித்து, அந்தப் படிப்பை படிப்பது உடனடி வேலைவாய்ப்புக்கு வழி வகுக்கும்.
ஏதோ ஒரு படிப்பைப் படித்து விட்டு அதற்கேற்ப வேலை தேடுவது என்று இனிவரும் தலைமுறை இளைஞர்கள் இருக்கக்கூடாது. முக்கியமான ஒன்று என்ன படித்தாலும் சரி எதிர்கால உலகத்தை எப்படி கையாள்கிறோம் என்பதை கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் படிப்பையும், வேலையையும் விட வாழ்க்கை முக்கியமானது,

No comments:

Post a Comment

AdSense-03