வெற்றி மனப்பான்மை - தமிழ் DUNYA

தமிழ் DUNYA

தமிழ் இனத்தின் சங்கமம்

Breaking

AdSense-02

24/11/2018

வெற்றி மனப்பான்மை


வெற்றி மனப்பான்மை..!

உலகில் உள்ள அனைவருக்கும் நினைத்தது வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பம் இயல்பாகவே இருக்கும்.
ஆனால், அவர்களால் முயற்சி செய்த செயலில் முழுமை காணமுடிகின்றதா? என்றால், பெரும்பான்மையானவர்கள், தங்களுக்கு நேரம், வறுமை, பணி, என பல காரணங்களை சாக்கு போக்காக வைத்து செயலளவில் சோர்ந்து போகிறார்கள். என்பதே மறுக்க முடியாத ஒன்றாக உள்ளது. ஏனெனில் வெற்றி என்பது ஏதோ ஒன்றை அடையக்கூடியது மட்டுமே என்ற தவறான கற்பிதத்தால் உருவான மாயத்தோற்றம் எனலாம்.

மிகச் சிறந்த சிந்தனை கருவூலமாக திகழ்ந்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள் வெற்றியைப் பற்றி மிக நுணுக்கமாக வரையறுப்பார்.

"Success is nothing but moving from failure without loosing enthusiam. It is a progressive realisation of a worthy goal"

மனக்குதூகலத்துடன் ஒன்றிலிருந்து ஒன்றிற்கு தொடர்ந்து பயணிக்கும் ஆற்றலே வெற்றியாகும். ஒரு திறமான இலக்கை அடைவதற்கான ஆக்கப்பூர்வ முயற்சியே வெற்றியின் தன்மையாகும். பின்வரும் வழியில் வெற்றியின் அடிப்படைகளை அறியலாம்.

1. சிறந்தவற்றை இலக்காக வைத்துக்கொள்ள வேண்டும்.

2. அந்த இலக்கை மட்டுமே முன்வைத்து முயற்சி செய்ய வேண்டும்.

3. எந்த தடைகள் வந்தாலும் மனச்சோர்வு இன்றி முயற்சி செய்ய வேண்டும்.

4. பின்னடைவு ஏற்படும் போது தளர்ச்சியின்றி செயல்படவேண்டும்.

5. தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.

6. மன உற்சாகத்தை இழக்காமல் சந்தோஷத்துடன் முயற்சி செய்ய வேண்டும்.

7. முடிவில் உள்ளதால் உறுதிசெய்யப்பட்ட, நினைத்த இலக்கினை அடைய வேண்டும்.

 இந்த ஒரு தடைபடாத தன்னிகரற்ற பயணமே வெற்றி என சொல்லலாம். ஆனால் ஒரு சில சிறு தோல்விகள் கூட மனித மனங்களை கொலைச் செய்துவிடுகின்றன என்ற செய்திகளை நாம் தினமும் கேட்கும் போது நெஞ்சம் பதற வைக்கிறது.
"ஐய்யோ இவர்கள் கொஞ்சம் பொறுமையுடனும், விடாமுயற்சியுடனும், இருந்திருந்தால் நினைத்த இலக்கை எட்டி இருக்கலாமே" என்று அவர்களுக்காக அனுதாபப்பட தோன்றுகிறது. எனவே எது வெற்றி என்ற தெளிவான பார்வையை மக்கள் மனங்களில் பதிவு செய்ய வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது.



பல இளைஞர்கள் படித்த பின்பும் அதற்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை என்று வருந்துவதும், மாணவர்கள் தங்களின் கடின முயற்சிக்கு ஏற்ற மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என்று மனம் நொந்து தற்கொலைக்கு முயல்வதும், வாடிக்கையாக உள்ளது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

"வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்" என்பார் திருவள்ளுவர். செயலின் இறுதியானது மனதில்தான் உள்ளது என்பதை உணர்ந்து கொள்பவருக்கு செயல்சோர்வோ அல்லது மனச்சோர்வோ அறவே இருக்காது.

சாக்ரடீஸிடம் ஒரு இளைஞன் ஐயா சிறந்த சிந்தனையாளரான தாங்கள் எனக்கு வெற்றியின் நுட்பத்தை உணர்த்த வேண்டும் என்றான். சாக்ரடீஸ் அவனிடம் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு சொல்லி அனுப்பினார். அவனும் சொன்ன மாதிரியே வந்துவிட்டான் சாக்ரடீஸ் அவனை ஆற்றின் பக்கம் அவருடன் நடந்து வருமாறு சொல்ல இருவரும் கழுத்தளவு நீருக்குள் வந்தவுடன் வலிமையான உடலுடைய சாக்ரடீஸ் அந்த இளைஞனை நீருக்குள் அழுத்தினார். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த இளைஞன் அவரின் இரும்புப் பிடிக்குள் இருந்து வெளிவர பெரிதும் போராடினான். சாக்ரடீஸ் அவன் முகம் நீல நிறமாக மாறும் வரை அவனை அழுத்தி வைத்திருந்தார். பின்னர் அவனை விட்டதும் அவன் நீரிலிருந்து தலையை வெளியே எடுத்து முயன்ற அளவு காற்றை தொடர்ந்து உள்ளிழுத்துக் கொண்டு இருந்தான். அப்போது சாக்கிரட்டீஸ் அவனிடம் நீ நீருக்குள் இருந்த போது எதை அதிகமாக விரும்பினாய்? என்று கேட்டார். அதற்கு அவன் 'காற்று' என அழுத்தமாக பதில் சொன்னான். உடனே சாக்ரடீஸ் அவனிடம் "வெற்றியின் அடிப்படையே இதுதான். நீ எவ்வளவு ஆழமாக காற்றை விரும்பினாயோ அதுபோன்றே வெற்றியை நீ விரும்பினால் அது உனக்கு இயல்பாகும்" என்றார்.

இதுதான் "வெற்றிக்கான நுட்பம்" என்று அவனை உணரவைத்து தெளியவைத்தார்.

எனவே நமக்குல் இருக்கும் பெரும் நெருப்பான ஆசையே வெற்றிக்கான அடித்தளத்தை உறுதியாக்கி இலக்கை எளிமையாக அடைய உதவி செய்கின்றது. இதனை உணர்ந்து மன உறுதியுடன் செயல்படுபவர்களுக்கு வெற்றி என்பது நிச்சயம் எளிதாகின்றது.

வெற்றி மனப்பான்மைக்கு எப்போதும் மன உறுதியே உயிரூட்டுகிறது.

No comments:

Post a Comment

AdSense-03