ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது, - தமிழ் DUNYA

தமிழ் DUNYA

தமிழ் இனத்தின் சங்கமம்

Breaking

AdSense-02

11/11/2018

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது,

பண்படுத்தும் நல்மொழிகள்..



சக்கரவர்த்தி அக்பரின் அரசவையில் அறிவுக்கூர்மைமிக்கவராகத் திகழ்ந்தவர் பீர்பால். அவரது அறிவுக்கூர்மையை கண்டறியும் வண்ணம் அடிக்கடி அக்பர் பலசமயம் கேள்விகளை கேட்பதுண்டு.



ஒருநாள் அக்பர் பின்வரும் கேள்விகளைக் கேட்க, பீர்பாலும் சளைக்காமல் சரியான பதில்களை கொடுக்கின்றார்.
"முட்டாளை எவ்விதத்தில் கண்டு கொள்ளலாம்?" என்று முதல் கேள்வியை கேட்டார் அக்பர்.

"அவனது பேச்சின் மூலம் கண்டு கொள்ளலாம்" என்றார் பீர்பால்.

"சரி எவன் தலை சிறந்த முட்டாள்?" அடுத்த கேள்வியைக் கேட்டார் மன்னர் அக்பர்.

"எவன் ஒருவன் தன்னுடைய உண்மையான மகிழ்ச்சி எங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ளாமல் அலைகிறானோ, அவனை முட்டாள்களிலெல்லாம் தலைசிறந்த முட்டாள்" என்று பதில் சொன்னார் பீர்பால்.

"அப்படியானால், உண்மையான மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு என்ன வழி?" என்று அடுத்த கேள்வியை தொடுத்தார், அக்பர்.

"போதுமென்ற மனதுடன், இருந்தால் அதுவே மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு சிறந்த வழியாகும்" என்று பதில் தந்தார் பீர்பால்.

உடனே அக்பர் "வெற்றி பெற முடியாத பகைவர் யார்?" என்று கேட்டார். "மரணம்" என்று பதில் தந்தார் பீர்பால்.

"அப்படியானால், எப்பொழுதும் அழியாதது?" என்று அடுத்த கேள்வியை கேட்க "புகழ்" என்று பதில் தந்தார் பீர்பால்.

"மிகச் சிறந்த ஆயுதம் எது" என்று அக்பர் கேள்வியை தொடர புத்திசாலித்தனம் என்று பதிலளித்தார் பீர்பால். "காற்றை விட வேகமாக செல்லக் கூடியது எது?" என்ற கேள்வியை அக்பர் கேட்க "மனம்" என்ற பதிலைத் தந்தார் பீர்பால். இப்படியாக இவர்களின் கேள்வி-பதில் அரங்கம் அறிவுப்பூர்வமாக தொடர்ந்து கொண்டேயிருந்தது.

இந்த கேள்விகளிலும் பதிலிலும் பல அரிய உண்மைகளும், தெளிவு தரும் சிந்தனைகளும் புதைந்துள்ளதை நாம் காணலாம்.

இரண்டாவது கேள்வியைக் கவனிக்கலாம் "தலைச்சிறந்த முட்டாள் யார்?" என்று கேட்கின்ற போது "தன்னுடைய உண்மையான மகிழ்ச்சி எங்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளாமல் அலைகிறவனே மிகப் பெரிய முட்டாள்" என்று பீர்பால் கூறுகின்றார்.

இந்த தலைசிறந்த முட்டாள்தனம் தான் இன்று பலரிடமும் தென்படுகின்றது. காலையில் விழித்ததும், தொடுவது செல்போன் படுக்கையில் இறுதியில் அணைப்பதும் செல்போன்தான் என்று பலரது வாழ்க்கை எந்தநேரமும் தொடுதிரையில் தான் இருக்கின்றது.


பெரியவர்களைத் தொற்றிக் கொண்ட இந்த தொடுதிரை கலாச்சாரம் இன்று பிள்ளைகளை மிக வேகமாக பற்றிக் கொண்டுள்ளது. முகநூல், வாட்ஸ் ஆப், ட்விட்டர், குழுவாக அரட்டை என்று எந்த நேரமும் செல்போனில் அரிய தருணங்கள் மரணித்து கொண்டிருப்பதை அறியாத இவர்கள்
இந்த "ஏட்டுச்சுரக்காயை வைத்து வாழ்க்கையை நடத்தலாம்" என்று கற்பனையுலகில் மிதந்து கொண்டு உள்ளார்கள்.

முதலில் தலைப்பில் தந்த பொன்மொழியைப் பற்றி ஒரு விளக்கம் தர வேண்டும். ஏனென்றால் நமது பிள்ளைகளில் பலருக்கு "சுரக்காய் என்றால் என்ன என்பது தெரியாது. பூசணிக்காய், வாழைக்காய் போல சுரக்காயும் ஒரு காய் தான். புத்தகத்தில் அழகாக பெரிதாக இருக்கும் சுரக்காய் படத்தை ஒருவன் பார்க்கின்றான் "ஆஹா இதை அப்படியே சமைத்துக் கறி செய்து அதைச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்" என்று ஒருவன் எண்ணினால் நாம் அவனை ஒரு வடிகட்டிய முட்டாள் என்று கூறுவோம். காரணம், பேப்பரில் இருக்கும் சுரக்காயைச் சமைக்க முடியுமா? இது எல்லோரும் அறிந்ததுதான். அதனால் தான் "ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது" என்பார்கள் பெரியவர்கள்.


உண்மையான சுரக்காய்க்கும் ஏட்டுச் சுரக்காய்க்கும் வித்தியாசம் உண்டு என்பதை ஒரு குழந்தையும் அறியும். அப்படியானால் உண்மையான மகிழ்ச்சிக்கும், அற்பத்தனமான மகிழ்ச்சிக்கும் வேறுபாடு தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா?

இன்று பல பெற்றோர்கள் "என் பிள்ளை படிப்பதேயில்லை. எந்த நேரமும் செல்போனில் தான் கிடைக்கிறது" என்று புலம்புகிறார்கள். ஆசிரியர்கள் மறுபுறம் "எங்கள் மாணவர்களில் பலர் படிப்பதற்கு நேரம் ஒதுக்குவதேயில்லை, வீட்டில் சென்றதும் குழுவாக அமர்ந்து கொண்டு அவரவர் வீட்டிலிருந்தபடி செல்போன் மூலம் விளையாடிக் கொண்டும் அரட்டை அடித்துக் கொண்டும் உள்ளார்கள்" என்று வேதனைப்படுகின்றார்கள்.


உழைக்க வேண்டிய நேரத்தில் ஒரு மனிதன் உழைத்தால் மட்டுமே ஊதியம் கிடைக்கும். அதைக்கொண்டு அவன் வாழ்க்கையை நடத்த முடியும். படிக்கின்ற நேரத்தில் ஒரு மாணவன் படித்தால் மட்டுமே எதிர்கால வேலைக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள முடியும். எனவே, தன் கடமையைச் செய்வது தான் மகிழ்ச்சிக்கு அடிப்படை என்பதை இவர்கள் உணர வேண்டும்.

தான் என்னேரமும் பார்த்துக் கொண்டிருக்கின்ற செல்போனும், தொடுதிரைக் காட்சிகளும், அவை தருகின்ற செய்திகளும் எதார்த்தமான வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாவற்றையும் தந்துவிடுமா? இல்லையா? என்பதை இப்படி காலத்தை வீணடிப்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

"உண்மையான மகிழ்ச்சி தன் கடமையை செவ்வனே செய்வதில் தான் அடங்கியுள்ளது" என்பதை உணராத வரை, புரிந்து கொள்ளாதவரை, தொடுதிரையில் நேரத்தை செலவழிக்கும் செயல்பாட்டினை முட்டாள்தனம் என்று கூறுவதைத் தவிர வேறு எப்படிக் கூற முடியும்?

அக்பர் கேட்ட கேள்விகளில் ஒன்று "மிகச்சிறந்த ஆயுதம் எது" என்பதாகும்.
இதற்கு பீர்பால் சொன்ன பதில் முக்கியமானது. "புத்திசாலித்தனம்" என்பதே இந்த பதில் புத்திசாலித்தனமாக யோசிப்பவர்கள் முட்டாள்தனமான காரியங்களைச் செய்ய மாட்டார்கள் என்பதாலேயே இந்த பதிலை பீர்பால் சொன்னார்.

நமது பிள்ளைகள் அறிவாளிகளாக உள்ள அளவிற்கு புத்திசாலிகளாக இல்லை என்பதுதான் உண்மை. நிறைய விஷயங்கள் நாம் தெரிந்து கொள்ள இன்றைய அனைத்து ஊடகங்களும் நமக்கு உதவுகின்றன. இது நமது நேர விரயத்தை குறைப்பதுடன் தெளிவான முடிவுக்கு எளிதில் வருவதற்கும் பேருதவி புரிகின்றது. எனவே ஊடகங்கள், இணையதளங்கள் மூலம் நாம் பெறும் அனைத்து செய்திகளும் நமக்கு மிகவும் உறுதுணையாக உள்ளன என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை.

"புத்திசாலித்தனம்" என்பது எந்த அளவிற்கு நமது ஊடகங்களையும், தொடுதிரை இணையங்களையும் பயன்படுத்தவேண்டும் என்ற தெளிவில் அடங்கியுள்ளது. மணிக்கணக்கில் இணையதளத்தில் நாம் செலவிடும் நேரம் தொழில் சார்ந்து, பயன்தருமேயானால் அதை கட்டாயம் நாம் செய்ய வேண்டும். ஆனால், தேவையில்லாத ஒன்றை மணிக்கணக்கில் பார்த்துவிட்டு, பின்பு அன்றாடம் முடிக்க வேண்டிய பணிகளை தள்ளிப் போட்டுக் கொண்டு செல்வதால் நமக்கும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நாம் பிரச்சனைகளை உருவாக்கி நின்றோம்.



நாம் எவ்வளவு நேரம் முகநூலிலும், வாட்ஸ்ஆபிலிலும், இணையத்தளத்திலும், தொலைக்காட்சி பார்ப்பதிலும், செலவிடுகிறோம் என்பதை அதை வழங்கும் நிறுவனங்கள் கணக்கில் எடுக்கின்றன. அந்தக் கணக்கின்படி அதிகமாக எந்த நிறுவனத்தின் நிகழ்வை நாம் காண்கின்றோமோ அல்லது பயன்படுத்துகிறோமோ அதன் அடிப்படையில் அவர்கள் தங்கள் வியாபாரத்தை அதிகரிக்கின்றார்கள்.

இந்த வாரம் தேர்வுக்கு தயாராக வேண்டிய மாணவன் படிக்காமல் 4 மணி நேரம், 5 மணி நேரம் ஏன் ஒரு மணி நேரம் இணைய நிகழ்வுகளில் செலவிட்டால் அவனது படிப்புக்கான ஒரு மணிநேரம் அவனிடமிருந்து திருடப்பட்டு விட்டது என்பதை அவன் உணர வேண்டும். இதை உணராதவர்களைத்தான் மகிழ்ச்சி எங்குள்ளது? என்று தெரியாத முட்டாள்கள் தான் "தலைச்சிறந்த முட்டாள்" என்கிறார் பீர்பால்.

நேரத்தை வீணடிப்பதே நாம் மகிழ்ச்சி என்று தவறாக நினைத்தால் அந்த இழந்த நேரங்களால் நமக்கு வந்திருக்க வேண்டிய வரவுகள் நாளை நம்மிடம் வராமலேயே விடைபெற்றிருக்கும் என்பது உண்மை. கல்வியறிவு, பதவியுயர்வு, பொருள் வளம், வீடு, பொன், செல்வம், வசதி வாய்ப்புகள் என்று நாம் எளிதில் பெற்றிருக்க வேண்டிய பலவும் பின்னாளில் கடும் உழைப்பால் பெற வேண்டி இருக்கும். எனவே, புத்திசாலித்தனமாக இந்த இணையம் மற்றும் ஊடக அடிமைத்தனத்திலிருந்து வெளிவந்தால் நமக்கு நல்லது.

"முடியும்" என்று முயல்வது!

அக்பர் கேட்ட கேள்விகளில் மற்றொரு கேள்வியும் சிந்திக்கக் கூடியது தான்.
" நாம் வெற்றி கொள்ள முடியாத பகைவர் யார்?" என்ற போது "மரணம்" என்று பீர்பால் சொன்னார்.

அப்படியானால் மரணத்தைத் தவிர அனைத்து தடைகளையும் நம்மால் நிச்சயம் வெற்றி கொள்ள முடியும் என்று பீர்பால் தன் அறிவால் குறிப்பிடுகின்றார். என்னால் செல்போனை தொடாமல் கொஞ்ச நேரம் கூட இருக்க முடியாது என்று சொல்பவர்களுக்கு இந்த பதில் "முடியும்" என்று கூறுகின்றது.

நமது பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். கட்டாயமாக ஒரு மூன்று வாரத்துக்கு தொடர்ந்து தேவையில்லாத தொடுதிரை மற்றும் ஊடக ஈடுபாட்டைக் குறைத்துக் கொண்டு வந்தால் நிச்சயம் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும்.
இன்று வீடுகளில் செல்போன் எண்ணும் அறைக்குள் எல்லோரும் புகுந்து கொள்வதால் அருகில் இருப்பவர்கள் கூட அன்பு செலுத்த முடியாமல், அன்பைப் பெற முடியாமல் தவிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

வாழ்க்கை என்பது பல்வேறு உணர்வுகளை காண்பித்து பகிரும் ஒரு வாய்ப்பு. ஆனால் அது இன்று இயந்திரத்தனமாகி வருகின்றது என்பது பெரிய ஆபத்தாக முடியும் என்று நம்மை அலற வைக்கிறது.

முதலில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கற்றுக்கொள்ளவேண்டியது "அவசரம்" மற்றும் "அவசியம்" என்ற செயல்பாடு விழிப்புணர்வு தான்.
நமது செயல்பாடுகளில் அவசரம் மற்றும் அவசியம் என்பது எப்போதாவது தான் வந்து போகும். எனவே அவை உருவாகின்ற போது அதை உடனே செய்து விட வேண்டும்.

அடுத்ததாக நாம் பார்ப்பது "அவசரமல்ல, ஆனால் அவசியம்" என்பது. இந்த மனநிலை அல்லது செயல் நிலையில் தான் நமது வாழ்க்கை பெரும்பாலும் கடந்து செல்கிறது. எனவே, இதனை கூர்ந்து கவனித்து முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக "அவசரம், ஆனால் அவசியமில்லை" என்ற நிலை வருகின்றது. எனவே, இது அவசரமாக இருந்தாலும் அவசியம் இல்லை என்னும் போது அதை தவிர்ப்பது தானே புத்திசாலித்தனம். இந்தச் சூழல்தான் என்று பலரையும் இணையத்தில் போட்டு வாட்டுகின்றது. நமக்கு செய்திகளை அனுப்பும் ஒவ்வொருவருக்கும், பதில் சொல்வது,வம்பிழுப்பது, என்று அவசியமில்லாதவற்றில் பலர் தமது நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நான்காவது "அவசரமுமில்லை அவசியமுமில்லை" பின் எதற்காக இதில் உங்கள் நேரத்தை செலவிடுகிறீர்கள் அப்படி செலவிட்டால் இது மிகவும் முட்டாள்தனமானது என்பதை தற்போது உணர்ந்து கொள்ள வேண்டும். பின்வரும் அட்டவணையில் பார்க்கலாம்.


3 மற்றும் 4வது நிலைகளில் எப்போதும் மூழ்கிக் கிடப்பவர்கள் தான் இணைய அடிமைகள். இவர்கள் தங்களை மாற்றிக்கொண்டு இரண்டாம் நிலைக்கு வரவேண்டும்.
இரண்டாம் நிலை தான் நமது வாழ்க்கையை வளப்படுத்தும் நிலை "அவசியம் ஆனால் அவசரமின்மை" (Not Urgent, But Important) என்பதுதான் ஆழ்ந்து வாழப்பட வேண்டிய நிலை. இந்த நிலையில் நமது மூளை அதிர்வுகள் நிதானமாக இருக்கும். செய்யும் பணிகள் சிறக்கும், படிப்பது பதியும், மகிழ்ச்சி மனதில் நிரம்பியிருக்கும், ஒரு ஆழமான ஓய்வு தன்மையோடும், குற்றமற்ற உணர்வோடும் உள்ளம் தன் செயல்பாடுகளை செய்யும் உன்னத நிலை இந்த நிலையாகும்.

இன்று படிப்பது நாளைய வேலைக்கு அடித்தளம் என்று ஒருவன் என்னும் போது அவனது செயல் "அவசியம் ஆனால் அவசரமல்ல" என்ற நிலைக்குள் தான் வருகின்றது. எனவே சிறப்பான இந்நிலையைப் பெற்று வாழ்க்கையைக் கொண்டு செல்ல வேண்டும்.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதது போல மாய உலகின் தொடுதிரை கவர்ச்சிகளில் மூழ்கிப்போவது வாழ்க்கைக்கு உதவாது.

இந்த நேரம் பொன்னானது என்று உணர்ந்து, எதார்த்த வாழ்க்கைக்காக ஒவ்வொரு நொடியையும் பயனுறப் பயன்படுத்த முனைய வேண்டும். நம்மை கடந்து செல்லும் நேரம் செலவழிகிறது என்று இல்லாமல் முதலீடு செய்யப்படுகிறது என்ற அர்த்தத்தில் உபயோகப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் "கனவு காண்பதும்" மற்றவர்களின் கனவுகளை ரசிப்பதும், மட்டுமே வாழ்க்கையல்ல" என்ற தெளிவு பிறக்கும்.

நமது வாழ்க்கையை அர்த்தப்படுத்த உலகின் உண்மைகளை புரிந்து கொள்வோம்.
மாய உலகில் இருந்து வெளிவந்து நிஜ வாழ்க்கையைக் கண்டு வாழ்வோம். ஏனென்றால் நிஜமான "சுரக்காயை" கொண்டு மட்டுமே நல்ல கறி சமைக்க முடியும்!

நன்றி..!

No comments:

Post a Comment

AdSense-03